இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார் ஆகியோர் வந்த வேகத்திலேயே தங்களது விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்தது. பிறகு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும், ரோஹித் ஷர்மாவும் அணியின் ஸ்கோரை 33ல் இருந்து 237க்கு கொண்டுவந்தனர். அப்போது ரோஹித் தனது விக்கெட்டை இழக்க அறிமுக ஆட்டக்காரரான சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜடேஜா 225 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த அஸ்வின் 37(89), துருவ் ஜோரல் 46(104), பும்ரா 26(28) விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 445 ரன்களை எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.
இதனைத் தொடர்ந்து, தன்னுடைய முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராலி மற்றும் டக்கர் இருவரும் இறங்கினர். இந்த நிலையில், ஜாக் க்ராலி 15(28) விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.