தினசரி ஏற்பட்டாலும் நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் நோய் தலைவலி. நாம் நினைக்கும் வகையில் அது சாதாரண பாதிப்பு அல்ல. அதனை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறார் மூளை, முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மரியானோ புருனோ.
தலைவலியில் நிறைய வகைகள் இருக்கின்றன. மூளை தவிர தலையில் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் பிரச்சனையால் வரும் தலைவலி என்பது ஒரு வகை. எதனால் தலைவலி ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து அந்தப் பகுதியில் உள்ள பிரச்சனையைக் களைய சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். மூளையில் ஏற்படும் பிரச்சனையால் வந்தாலும் அறுவை சிகிச்சை தேவைப்படாத தலைவலி என்பது இரண்டாவது வகை. மூளையில் ஏற்படும் பிரச்சனையால் அறுவை சிகிச்சை தேவைப்படும் தலைவலி என்பது மூன்றாவது வகை.
அறுவை சிகிச்சை தேவைப்படும் தலைவலி பிரச்சனை என்றால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். தாமதம் செய்யச் செய்ய மூளையின் பாதிப்புகள் அதிகரிக்கும். தாமதமாக செய்துகொள்ளும் அறுவை சிகிச்சை முழுமையான பலனை அளிக்காது. பெரும்பாலானோருக்கு வரும் தலைவலி அறுவை சிகிச்சை தேவைப்படாதவை தான். மூளையில் உள்ள ஏதேனும் ஒரு பிரச்சனை காரணமாக மூளையின் அழுத்தம் அதிகரித்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
தலைவலி என்பது சாதாரணமாகவும் இருக்கலாம், புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம், உயிர்க்கொல்லி நோயாகவும் இருக்கலாம். எனவே தலைவலிக்கான காரணத்தை முதலில் கண்டறிவதே சிறந்த நடைமுறை. காசநோய் போன்ற கிருமித் தாக்குதலால் கூட தலைவலிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். கட்டி போன்ற பிரச்சனைகள் இல்லாவிட்டாலும், மூளையில் இருக்கும் ரத்தக்குழாயில் ஏற்படும் வீக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படும். இதற்கும் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
அறுவை சிகிச்சை தேவைப்படும் தலைவலிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மாத்திரைகள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பது சரியான தீர்வல்ல. தலைவலி என்பதை அறிவியல்பூர்வமாக அணுகினால் அதற்கான சிகிச்சை என்பது மிக எளிதானது.