முடி உதிர்தலைத் தடுக்க நாம் சாப்பிட வேண்டியவை குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் நம்மிடையே விளக்குகிறார்
முடி உதிர்தல் பிரச்சனை இன்று பலருக்கும் இருக்கிறது. ஹெல்மெட், ஏசி, ஷாம்பூ போன்ற பல காரணங்களினால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. வாரத்தில் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். இதைப் பலரும் இப்போது செய்வது கிடையாது. நேரமின்மையை அதற்கான காரணமாகச் சொல்கின்றனர். அந்தக் காலத்தில் கால் பாதத்தில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வந்தனர். இதன் மூலம் உடலில் உள்ள சூடு வெளியேறும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும்போது தான் முடி உதிர்தல் ஏற்படும்.
மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மொபைல் ஸ்கிரீனை நாம் அதிகம் பார்க்கும்போது நம்மை அறியாமல் நம்முடைய தலையில் உஷ்ணம் ஏறும். அதிக நேரம் ஏசியில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை நாம் உண்ண வேண்டும். கால்சியம் உள்ள உணவுகளையும் நாம் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் முருங்கைக் கீரையில் இருக்கிறது.
முருங்கைக் கீரையை நாம் உணவில் குறைவாகவே பயன்படுத்துகிறோம். பெண்களுக்கு நிறைய சத்து தேவைப்படுகிறது. அவர்கள் முருங்கைக் கீரையை அதிகம் உண்ண வேண்டும். மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதால், அவர்களுடைய எனர்ஜி குறைகிறது. இதனால் முடி உதிர்தல் பிரச்சனை அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது. வாரத்தில் இருமுறை அவர்கள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலையையும் நாம் உணவில் பயன்படுத்த வேண்டும்.
கறிவேப்பிலையில் நிறைய வைட்டமின்கள் இருக்கின்றன. கரிசலாங்கண்ணியை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி கருமையாகும். தினமும் நாம் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும். அனைத்து விதமான சத்துக்களும் அதில் இருக்கின்றன. காலையில் இரண்டு பேரிச்சம்பழம், மாலையில் இரண்டு பேரிச்சம்பழம் என்று நாம் சாப்பிட வேண்டும். அதேபோல் பாதாமையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பாதாம் எண்ணெய் பயன்படுத்துவதும் நல்லது. கொய்யாப்பழம், உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது. முடிந்தவரை சீயக்காய் பயன்படுத்தலாம்.