Skip to main content

கள்ளு குடித்தால் உயிரை குடிக்கும் நிபா வைரஸ்!

Published on 22/05/2018 | Edited on 22/05/2018

இன்று கேரள மாநிலத்தையே பீதியடைய வைத்துக் கொண்டுள்ளது நிபா வைரஸ் காய்ச்சல். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துவிட, அவர்களின் இரத்தம், சளி மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

 

bat


 

 

 

இவர்கள் இறப்பிற்கு நிபா வைரஸ்தான் காரணம் என கண்டறியப்பட்டது. அடுத்து அவர்களுக்கு சிகிச்சை செய்த நர்ஸ் இறந்துவிட பரபரப்பு அதிகமானது. அடுத்தடுத்து மெம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மலபுரம் மாவட்டத்தில் 7 பேர் இறந்தனர். இந்த காய்ச்சல், தொற்று நோய் போன்று வேகமாக பரவி வருவதால் நோய் தாக்கியவர்களின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே கேரளா முழுவதும் கடுமையான பீதி நிலவி வருகிறது. கேரள மாநிலம் அடுத்து தமிழகத்தின் எல்லையிலும் இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

 

மலேசியா நாட்டில் கம்பங் சுங்காய் நிபா என்ற கிராமத்தில் 1998 இல் அதிகபடியான பேர் மர்ம காய்ச்சலுக்கு இறந்து போனார்கள். அவர்களின் இறப்புக்கு காரணமான வைரஸ் அதே கிராமத்தின் பெயரில் நிபா வைரஸ் என பெயரிடப்பட்டது. அப்போது 477 பேர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகினர். அதில் 252 பேர் இறந்தனர். முதலில் எப்போதும் போல மருத்துவ உலகம் குழம்பிப்போனது. அதாவது சிங்கப்பூர், மலேசியாவில் பன்றிகள் மூலம் இந்த நோய் பரவியதால் மக்கள் இறந்தனர். இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் பன்றி வளர்ப்பவர்கள். அடுத்து மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, வங்காளதேசம் நாடுகளில் இதே நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதால் இறந்தனர். இது எப்படி என்று குழம்பிய மருத்துவ ஆய்வாளர்கள் பன்றி மூலம் மனிதர்களுக்கு இந்த நிபா வைரஸ் பரவுகிறது என்பதை உறுதி செய்தனர். இருந்தாலும் பன்றிகளும், மனிதர்களும் இந்த நோயின் ஆரம்ப இடம் கிடையாது, எங்கிருந்து பரவுகிறது என்று குழம்பி போயிருந்தனர். அப்போது கம்போடியா, தாய்லாந்து, மடகாஸ்கர் நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் நிபா வைரஸ் உருவாக்குவது பழம் தின்னும் வௌவால்கள் தான் என்பதை வெற்றிகரமாக கண்டுபிடித்தனர். சரி இந்த நோய் ஏன் வௌவால்கள் ஏற்படுத்துகிறது. 

 

 

எல்லா பத்திரிக்கைகளும் எழுதுவது போல பேசாமல் வௌவால்கள் மீது பழியை போட்டு விடவேண்டியது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வழக்கம் போல இன்று உலகில் புதிய புதிய நோய்கள் உருவாக உயிரினங்கள் காரணமில்லை. மனிதன் மட்டுமே காரணம். இந்த சுயநல மனிதன் இந்த நோய்க்கு கூட காரணம்தான். இந்த நோய் பரவிய இடங்களில் அதிகளவில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. இயற்கை சூழல் வேகமாக அழிக்கப்பட்டு நகரமயமாக்கப்பட்டிருந்தன. அப்படிதான் இந்த நோய் பரவிய இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டன. பழம் தின்னி வௌவால்களின் உணவான பழ மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பொதுவாகவே உயிரின சூழலில் பசியும் மனவருத்தமும் நோயை உண்டு பண்ணும். குறிப்பாக ஆர்.என்.ஏ (RNA) வைரஸ்களின் தொற்று ஏற்பட்டு நோய் உருவாகும். அப்படிதான் பசியாலும் மனவருத்தத்தாலும், என்னது வௌவால்களுக்கு மனவருத்தமா என்றால் ஆம் அனைத்து விலங்குகளுக்கும் மனவருத்தம் ஏற்படும். அதுவும் பறக்கும் பாலூட்டியான வௌவால்களுக்கும் மனவருத்தம் உண்டு. இதனால் ஆர்.என்.ஏ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானது. பாரமிக்ஸோவைரைடு (Paramyxoviridae) குடும்பத்தை சேர்ந்த இந்த ஆர்.என்.ஏ வைரஸ், கெண்ட்ரா வைரஸ் (Hendra Virus)  வகையை சேர்ந்தது. இந்த வகை வைரஸ் பழம் தின்னி வௌவால்களின் உடலில் இயற்கையாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த வௌவால்கள் எப்போது பலவீனமாக இருக்கிறதோ அப்போது இந்த வைரஸ் அதிகளவில் இந்த வௌவால்களிடம் காணப்படும். பழம் தின்னி வௌவால்களின் எச்சில், கழிவுகள், வாய் மற்றும் உடல் முழுதும் இந்த ஆர்.என்.ஏ வைரஸ் பரவியிருக்கும். இதோடு பழ வெளவாலின் பறக்கும் நரி, குறுவௌவால் என பல இனங்களிலும் இந்த வைரஸ் காணப்படுகின்றது. குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஆர்.என்.ஏ வைரஸ் தொற்றுக்கு இந்த வௌவால்கள் அதிகளவில் பாதிக்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மாதங்களில் அதுவும் மே மாதத்தில் இளம் வௌவால்கள் அதிக அளவில் பறக்க துவங்கும். இதே காலக்கட்டத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பனைகள்ளு, ஈச்சங்கள்ளு மரங்களிலிருந்து எடுக்கப்படும். உயரமான மரங்களில் இருக்கும் இந்த கள்ளுக்கு மனிதர்களை போல வௌவால்களுக்கு ஈர்ப்பு அதிகம். இந்த கள்ளு மரங்களில் வௌவால்களின் எச்சங்கள் பரவி அதை குடிக்கும் மனிதர்களுக்கும் நிபா வைரஸ் நோய் ஏற்படுகிறது. இதனால்தான் பனை கள்ளும், ஈச்சங்கள்ளும் இறக்கும் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் நோய் பரவியது குறிப்பிடத்தக்கது. 

நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் பொதுவாக லேசான காய்ச்சலுடன் தலைவலி, உடல் வலி, மனச்சோர்வு ஏற்படுகிறது. பின்னர் இந்த நோயளிகள் மூன்று முக்கிய விதமான தாக்குதலுக்கு ஆளாகின்றனர். முதலில் கெண்ட்ரா வைரஸ் போல் சுவாசப் பிரச்சினையை உருவாக்கி மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக மூளையை தாக்குவதால் மூளையில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான மூளைக்காய்ச்சல் உருவாகிறது. மூன்றாவதாக நரம்பு மண்டலத்தை பாதித்து கோமாவை ஏற்படுத்துகிறது. கோமாவுக்கு சென்றவர்களுக்கு இறுதியில் மரணம் ஏற்படுகிறது. 

இந்த நோய்க்கு தற்போது வரை சரியான மருந்துகள் இல்லை. இப்போதைக்கு ரிபாவைரின் (Ribavirin) மருந்தைதான் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. வைரஸ் காய்ச்சலுக்கான இந்த மருந்து மூலம் காய்ச்சலை கட்டுப்படுத்தலாம். மேலும் இந்த நோயினால் ஏற்படும் குமட்டல், வாந்தி, வலிப்பு போன்றவற்றையும் மட்டுப்படுத்தலாம். சிகிச்சை முக்கிய நோக்கமாக காய்ச்சல் கட்டுப்படுத்தி நரம்பியல் பிரச்சினையை சரி செய்தால் மரணத்திலிருந்து காப்பாற்றலாம். சத்தான ஆகாரமும் நீர்சத்தும் நல்ல காற்றோட்டமும் இந்த நோயளிக்கு மிக முக்கியம். நிபா வைரஸ் காய்ச்சல் உடைய நோயாளிகள் கட்டாயம் பன்றி காய்ச்சல் போன்று தனி அறையில் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் தும்மல், இருமல், எச்சில் போன்றவைகள் மூலம் சக மனிதனுக்கு இந்த நோய் பரவும். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கட்டாயம் விலகி இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் இருமல், சளி, எச்சில், இரத்தம் போன்றவை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பன்றி வளர்ப்போர், பழங்கள் சாப்பிடும்போது பொதுவாக வௌவால்கள் படாதவையாக இருக்க வேண்டும். பனை, தென்னை, ஈச்சங்கள்ளு குடிப்பதை தவிர்ப்பது மிக மிக முக்கியம். கள்ளு தான் பழ வெளவால்கள் நிபா வைரஸை மனிதனுக்கு சேர்க்குமிடம். ஆக இப்போதைக்கு கள்ளு விற்பனையை கடுமையாக கட்டுப்படுத்துவது நல்லது. அதேபோல இந்த வைரஸ் காய்ச்சலும் நிச்சயம் ஜூன் மாதத்திற்கு பிறகு குறைந்து போகும்.