Skip to main content

மங்களங்கள் அருளும் திருநகரி கல்யாண ரங்கநாதர்! 

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
thirunagari - Sri Kalyana Ranganathar temple

எந்த உயிராக இருந்தாலும் துன்பத்தில் இருக்கும்போது உதவி செய்வது மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையல்லவா? உதவி செய்வது என்பது இறைவனுக்குச் செய்யும் தொண்டுதான்''. அடுத்தவருக்கு உதவவேண்டும் என்று நம் மனதைப் பழக்கிக் கொண்டால் அந்த எண்ணம் நம்மோடு ஒன்றிவிடும். இதுபோன்ற மேன்மையைக் கடைபிடித்து, மேன்மையாக வாழ வழிவகை செய்தருளும் ஒரு அற்புதமான திருத்தலம்தான் திருநகரி கல்யாண ரங்கநாதர் திருக்கோவில்.

இறைவன்: ஸ்ரீ வேதராஜப் பெருமாள்.

இறைவி: அமிர்தவல்லி நாச்சியார்.

உற்சவர்: ஸ்ரீ கல்யாண ரங்கநாதர்.

தீர்த்தம்: இலாக்ஷ புஷ்கரணி தீர்த்தம்.

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார்.

ஊர்: திருநகரி.

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வாலயம் சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலங்களை திவ்யதேசங்கள் என்று கூறுவர். அத்தகைய 108 திவ்ய தேசங்களில் 34-ஆவது திவ்ய தேசமாக இது போற்றப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புகளுடன் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருவா - திருநகரி என்னும் திருநகரி கல்யாண ரங்கநாதர் திருக்கோவில்.

சிறப்பம்சங்கள்

தென்கலை வைணவ முறைப்படி காலபூஜைகள் நடக்கும் இவ்வாலயம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. திருமங்கை மன்னர் வேதராஜபுரத்தில் வழிப்பறி செய்ய, பெருமாள் தடுத்தாட்கொண்டார். இதனை உணர்த்தும் வண்ணம் வேடுபறி உற்சவ நிகழ்ச்சி இன்றும் நடந்துவருவது சிறப்பான ஒன்று. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் இவ்வாலயத்திற்குத் திருப்பணிகள் செய்துள்ளதை கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

பெருமாள் கல்யாணத் திருக்கோலத்தில் இளம் தம்பதியாகக் காட்சியருள்வதால் கல்யாண ரங்கநாதர் என்னும் பெயர் வந்தது. "ஆண்டுதோறும் தைமாதப் பௌர்ணமியன்று திருமங்கையாழ்வார் மங்களாசாசன உற்சவ நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது திருமங்கையாழ்வாரின் உற்சவச் சிலையைப் பல்லக்கில் ஏற்றி, திருமணி மாடம் முதல் திருநகரிவரை அழைத்துச் செல்லப்படுகிறார். கருடசேவையன்று சுற்றியுள்ள 11 திருநாங்கூர் கோவில்களிலிருந்து கருட உற்சவர்களை இக்கோவிலில் எழுந்தருளச் செய்துவதுடன், திருமங்கையாழ்வாரையும், அவர்தம் இணையரான குமுதவல்லி நாச்சியாரையும் அம்ச வாகனத்தில் எழுந்தருளச் செய்து திருமங்கையாழ்வாரின் பாடிய நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாடல்களைப் பாடுவது கண்கொள்ளாக் காட்சி'' என்கிறார் ஆலய அர்ச்சகரான ஸ்ரீதரன் பட்டாச்சாரியார்.

திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் திருமங்கையாழ்வார் தனிச்சந்நிதி கொண்டு காட்சிதருகிறார். எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒரு கொடிமரமும் என இரண்டு கொடிமரங்கள் உண்டு. "ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தரை வணங்கி, பின் சுவாமி, அம்பாள், உற்சவரை வணங்கினால் கலைகள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். ஞாபக சக்தியையும் தந்தருள்வார்'' என்கிறார் ராஜன் பட்டாச்சாரியார். அஷ்டாட்சர விமானத்தின் கீழ் அருளும் மூலவர் வேதராஜப் பெருமாள், அமிர்தவல்லித் தாயார், உற்சவர் கல்யாண ரங்கநாதர் ஆகியோர் எல்லா நலன்களையும் அருளுவதோடு, தம்பதியர் ஒற்றுமை, சுபகாரியம் கைகூடல் போன்ற மங்களங்களையும் நிறைவாக அருள்கின்றனர்'' என்கிறார் பத்மநாபன் பட்டாச்சாரியார்.

குளிர்ந்த காற்று வருடும் பூம்புகார் கடற்கரைக்கு அருகில் கிழக்கு நோக்கிய 125 அடி உயர ஏழுநிலைகொண்ட ராஜ கோபுரத்துடன், திராவிடக் கட்டடக் கலையில் மனதைக் கொள்ளைகொள்ளும் விதத்தில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் மூன்று திருச்சுற்றுகளுடன் ஆலயம் அமைந்துள்ளது. வைணவ முறைப்படி அனைத்து சந்நிதிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் தனிச்சந்நிதியில் உள்ளார்.

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் திருக்கோவில், சீர்காழி வட்டம், திருநகரி அஞ்சல், மயிலாடுதுறை மாவட்டம்- 609 106.

அமைவிடம்: சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் புதுத்துறை மண்டபத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், புதன் தலமான திருவெண்காட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநகரி. பிலவ வருடம் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியன்றும், தை மாதப் பௌர்ணமியன்று திருஞான சம்பந்தர் வேடுபறி உற்சவ நிகழ்ச்சியிலும் "ஓம் சரவணபவ' வாசகர்கள் கலந்துகொண்டு பெருமாளின் அருளைப் பெறலாம்.

- கோவை ஆறுமுகம்