திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறும். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை தந்தார். இந்நிலையில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதற்காக உற்சவர் நம்பெருமாள் இன்று அதிகாலை 4:45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு சித்திரை தேர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்கு தேரில் மேஷ லக்னத்தில் நம் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து 6:30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது. இந்தத் தேரோட்டத்தில் திருச்சி மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பக்தர்கள் ரங்கா ரங்கா என்று கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் தேரோட்டத்தின் போது நடந்த அசம்பாவித சம்பவத்தால் 11 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் தேரோட்ட முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.