பக்தி, அன்பு, பாசம் என்பதெல்லாம் என்ன? இவையெல்லாம் ஒரு பொருளைக் குறிப்பதா? பொருள் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சரி; பொருள் என்றால் என்ன? அது வாங்கக்கூடிய பொருளல்ல. அது சகலத்தையும் செய்யும்; சகலத்திற்கும் உயிரூட்டும்; சகலத்தையும் அழிக்கும்; சகலத்தையும் காத்தருளும். அது தான் அண்ட பேரண்டத்தையும் மறைபொருளாக இருந்து ஆட்சிசெய்யும் பரம்பொருள். ஆம்; பரம்பொருளே பரமசிவம். நாம் சதா சிவம் என்றிருந்தால் அது "அன்பே சிவம்' என்பதை அறியவைக்கும். அதையறிய எது வேண்டும்? ஆரோக்கியம் வேண்டும். ஆரோக்கியம் பெற எது வேண்டும்? பக்தி செய்யவேண்டும். ஒரு கோவிலிலுள்ள மூலஸ்தானத்தில் மூலவருக்கு அபிஷேகம் நடக்கும்.
1.முதலிலில் தூய்மையான தண்ணீரில் கழுவி பின்னர் மஞ்சள் அபிஷேகம்,
2.வாசனைத் திரவிய அபிஷேகம்,
3.சந்தன அபிஷேகம்,
4.இளநீர் அபிஷேகம்,
5.விபூதி அபிஷேகம்,
6.பன்னீர் அபிஷேகம்,
7.சொர்ண அபிஷேகம்
இவ்வாறான அபிஷேகங்களை வரிசையாக முடித்து வண்ண மலர்களால் அலங்கரித்து, அர்ச்சர்கள் சிவபெருமானை வழிபடுவார்கள். பக்தர்கள் மனமும் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து எல்லையில்லா ஆனந்தத்தில் திளைப்பர். இத்தகைய அபிஷேகத்தைப் பற்றி திருமந்திரச் சிற்பி திருமூலர்...
"எய்தி வழிப்படில் எய்தாதன இல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முக்தியே'
என்கிறார். அதாவது, வாச மலரிட்டு, வண்ணக் கலவைகள் சாற்றி, அமுதுபடைத்து, அன்பு கொண்டு தீபதூபம் காட்டி வழிபாடு செய்தால் அடைய முடியாதது ஒன்றுமில்லை. இந்த முறையில் நின்று வழிபாடு செய்பவர் இந்திரலோகச் செல்வம் அடையப் பெறுவர். அவர்களுக்கு எட்டுவகை சித்திகளும் கைகூடும். எல்லாவற்றிற்கும் மேலாக இம்முறையில் வழிபடுவோர் முக்தியின்பமும் சித்திக்கப் பெறுவர் என்கிறார்.
இப்படி அர்ச்சனை செய்வதும், அபிஷேகம் செய்வதும் மிக உயரிய விஷயமாகும். இதனால் மூலவரின் ஆதிமூலமான பரம்பொருள் ஆற்றல் பேரானந்தம் அடைகிறது. எவ்வித எதிர்பார்ப்புமில்லாத எம்பெருமான் ஈஸ்வரன் அடியார்களுக்கு அளவற்ற அருளாசியை வழங்கி ஆனந்தப் படுத்துகிறார். மூலவருக்கான அபிஷேக ஆராதனையை எப்படிச் செய்யலாம் என்பதை உடல் இயக்கவியலிலின் மேதை திருமூலர்-
"வரைத்து வலம்செய்யுமாறு இங்கு ஒன்றுண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன்நாம் உணர வல்லார்க்குப்
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே'
என்று பாடுகிறார். அதாவது விண்ணும் மண்ணும் அளக்க, எங்கும் விரிந்து பரந்து நிறைந்திருக்கிற பரம்பொருளை ஒன்றில் எழுந்தருளச் செய்து வழிபடும்முறை ஒன்று இங்குள்ளது. அதுவே சிவலிங்க வழிபாடாகும். பொங்கிப் பெருகிவரும் கங்கை நீரையும், வாசமலர்களையும் கைகளில் ஏந்தி, ஐந்தெழுத்து மந்திரத்தை (நமசிவய) ஓதி வழிபடவேண்டும். இப்படிப் பரம்பொருளை உள்ளத்தால் உணர்ந்து வழிபடுவோரின் உள்ளத்தைவிட்டு வள்ளல்பெருமான் வெளியே போகமாட்டான். அவர்களின் உள்ளத்திலேயே இருப்பான் என்று கூறுகிறார்.
எனவே இதுபோன்ற வழிபாடுகளால் சிவப்பரம்பொருளை நம் உள்ளத்தோடும், உணர்வோடும் ஒன்றியிருக்கச் செய்ய, இறைவன் அருளிய இவ்வுடலெனும் கூடு ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உடலின் சீரான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிற அக, புற (உள், வெளி) உறுப்புகள் அனைத்தும் உறுதியாகவும், நல்லுணர்வோடும் இயங்கிட "ஆசன அபிஷேகம்' செய்யவேண்டும். உடலில் உச்சிமுதல் பாதம்வரையுள்ள உறுப்புகளில் மூளையானது திறம்பட செயல்படவேண்டும். அதற்கு மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) அவசியம். அதேபோல மூளையானது அபரிமிதமான செயல்திறனோடும், அளப்பரிய நினைவாற்றலோடும் செயல்பட நாம் "பர்வதாசனம்' பழகவேண்டும். இப்பயிற்சியானது தலைப்பகுதியிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகும். ஆசனங்களின் அரசன் என்று சொல்லப்படும் சிரசாசனத்திற்கு நிகரானதாகும். அடுத்தது "தாடாசனம்' பழகவேண்டும். இது ரத்த அழுத்தத்தைப் போக்கி இதய செயல்பாட்டை சமன்படுத்துகிறது. அடுத்து "தாளாசனம்' பழகவேண்டும். இது தோள் மூட்டுகளுக்கும், விலா எலும்புகளுக்குமான ஆசனமாகும். இது நீரிழிவைத் தடுக்கிறது.
பின்பு "விருக்ஷாசனம்' பழகவேண்டும். இது இடுப்பெலும்பு, முழங்கால் மூட்டுகள், கணுக்கால் மூட்டுகளுக்கு மிகுந்த வலிமையையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. அடுத்து "பரிவர்த்தன திரிகோணாசனம்' பழகவேண்டும். இது நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் ஆசனமாகும். வலிப்பு நோய் தடுக்கப்படுகிறது. அடுத்தது "உத்தானாசனம்', "யோக முத்ரா, "பஸ்சிமோத்தாசனம்' பழகவேண்டும்.
இவ்வகை ஆசனங்கள், ஒருங்கிணைந்த சக்கரங்களின் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை அபரிமிதமாகத் தூண்டி ஆரோக்கியமான உடலியக்கத்திற்குத் துணைபுரிகின்றன. எனவே இதுபோன்று நாம் செய்யும் ஒவ்வொரு ஆசனமும் உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கும், உடலுறுதிக்கும், மனஉறுதிக்கும், மன அமைதிக்கும் உதவிகரமாக இருக்கின்றன. இவ்வாறு நாம் செய்யும் ஆசனங்களெல்லாம் நம் உடலின் உள், வெளி உறுப்புகளுக்குச் செய்யும் அபிஷேகமாகும். அது வெறும் அபிஷேக மல்ல; உன்னதமான யோகாபிஷேகமாகும். அதன் விளைவாக இறைவன் சிவபெருமானின் உன்னத நிலையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளமுடியும். சரியை, கிரியை, யோகம் என்று வகைப்படுத்துகிறார் திருமூலர். சரியை என்பது உருவத்தைப் பார்த்து வழிபடுவது; கிரியை என்பது உருவத்தை அலங்கரித்து வழிபடுவது என்று பொருளாகும். இந்த இரண்டு செயல்களால் நமது உடலெனும் கூட்டிற்கு "வீடுபேறு' கிடைக்காது. எனவே நாம் ஒவ்வொருவரும் யோகம் எனும் "யோகாபிஷேகம்' செய்வோம்.வீடுபேற்றைப் பற்றி சங்க காலப் புலவர் ஔவையார்-
"பற்றற்று நின்ற பரம்பொருளை சிந்திக்கில்
முற்றும் அழியாது உடம்பு'
என்கிறார்.
விருப்பு, வெறுப்பு இல்லாதிருக்கிற இறைவனை மனதில் உள்ளன்போடு இருத்தித் தியானம் (யோகத்தில் அடங்கியதே) செய்தல் வேண்டும். அப்படிச் செய்பவர்களின் உடல் அழியவே அழியாது. இவ்வாறாக ஒருவரின் மனமானது சதாசிவம் எனும் சிவலிங்க வழிபாட்டில் ஈடுபடவேண்டுமெனில், நாம் ஒவ்வொருவரும் யோகாபிஷேகம் செய்வோம். யோகத் தந்தையும், தாயுமானவருமான சிவபெருமானின் அன்பைப் பெற்று, ஆரோக்கிய ஆனந்த வாழ்வைப் பெறுவோம்.
- யோகி சிவானந்தம்