தன்னுடைய 30 ஆண்டுக்கால நாடி ஜோதிட அனுபவத்தில் நிகழ்ந்த வியப்பான அனுபவங்களை நம்முடன் பிரபல நாடி ஜோதிடர் துரை சுப்புரத்தினம் பகிர்ந்துகொள்கிறார்.
ஒருமுறை ஒரு வட இந்தியர் வந்தார். அவருடைய பெண்ணிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நம்முடைய ஓலையில் அவர் பெண்ணிற்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை தற்போது சிறையில் இருக்கிறார் என்கிற தகவல் வந்தது. இதை அவரிடம் எப்படி வெளிப்படுத்துவது என்று நான் தயங்கினேன். அவர் ஏதாவது சிக்கலில், வழக்கில் இருக்கிறாரா என்று தயங்கியபடி கேட்டேன். "கரெக்ட்" என்று பதில் வந்தது. பணம் வசூலிக்கச் சென்ற ஒரு இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கொலை செய்திருக்கிறார். தவறான மனிதர் இல்லை, ஆனால் உணர்ச்சிவயப்பட்டு தவறு செய்திருக்கிறார் என்பதால் இந்த சம்பந்தம் வேண்டுமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் அவர் இருந்தார். இந்த மாப்பிள்ளையோடு அவர் பெண்ணிற்குத் திருமணம் நடக்காது. வேறு ஒருவருடன் தான் நடக்கும் என்று நாம் சொன்ன பிறகு அவர் தெளிவடைந்தார். அதுதான் நடந்தது.
இன்னொருவருக்கு ஓலை பார்க்கும்போது "நீங்கள் உங்கள் மகனோடு தான் இதைப் பார்க்கிறீர்கள்" என்று வந்தது. ஆனால் அந்த அறையில் நானும் அவரும் மட்டும் தான் இருந்தோம். அருகில்தான் அவரின் வீடு என்றாலும் அவர் மட்டும் தான் அங்கு வந்திருந்தார். ஓலையில் வந்ததை நாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய மகன் மழை நேரத்தில் தன்னுடைய அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகக் குடையுடன் உள்ளே நுழைந்தார். இதெல்லாம் எனக்கே ஆச்சரியம் அளித்த தருணங்கள். ஒரு மிக முக்கிய அரசியல்வாதி உட்பட சிலர் நம்மிடம் அடிக்கடி வருவதால் ஓலையை அவர்களே படித்துப் புரிந்துகொள்ளும் அளவிற்குத் தெளிவடைந்துள்ளனர்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். தெலுங்கு பேசும் இரண்டு குடும்பங்கள். மணமகனுடைய குடும்பமும், மணமகளுடைய குடும்பமும் அவர்களுக்கே தெரியாமல் ஒரே நாளில் நம்மிடம் வந்தனர். அந்த நேரத்தில் அந்த இரு குடும்பங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரு குடும்பங்களுக்கும் முதல் அத்தியாயம் படிக்கப்பட்டு பரிகாரங்களுக்காகக் காத்திருந்த சமயத்தில் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. இருவருக்கும் நாம் சொன்ன விவரங்கள் இரு குடும்பங்களுக்கும் பொருந்தியது. மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் அனைத்தும் கச்சிதமாகப் பொருந்தியது. அவர்களுடைய திருமணமும் நம் முன்னேயே நிச்சயிக்கப்பட்டது. நானும் அந்தத் திருமணத்திற்கு சென்றேன்.
இந்தியன் வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன் பிரச்சனைகள் ஏற்பட்டு பல அதிகாரிகள் சிக்கினர். அவர்களில் பலர் நம்மிடம் நாடி ஜோதிடம் பார்க்க வந்தார்கள். நாம் சொன்ன பரிகாரங்களை மேற்கொண்டவர்கள் எல்லாம் தப்பினர். செய்யாதவர்கள் வழக்குகளில் சிக்கினர். அதேபோல் காவல்துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தனக்கு மேலே உள்ள அதிகாரிகள் செய்த தவறால் வழக்கில் சிக்கி பணிநீக்கம் செய்யப்படுகிறார். அவர் தன் குடும்பத்தோடு நம்மிடம் வந்தார். "இதிலிருந்து மீளவில்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று அழுதனர். "இந்த வழக்கிலிருந்து நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்" என்று ஓலையின் மூலம் நாம் சொன்னோம். நாம் சொன்ன பரிகாரங்களையும் அவர்கள் மேற்கொண்டனர். சரியாக மூன்று மாதங்களில் அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.