தாய் என்ற வார்த்தைக்குதான் என்ன மதிப்பு! தாய் என்றாலே அன்பு, பாசம், பண்பு, கருணை, தியாகம் என்று எல்லாம் கலந்த கலவையாக அல்லவா இருக்கிறாள். "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவ வாங்க முடியுமா!' என்ன ஒரு கவிஞனின் வார்த்தைகள். தாயைப் புகழாத கவிஞனோ, மகளோ, மகன்களோ இந்த பூமியில் இருக்கவே முடியாது. கருவறையில் பத்து மாதங்கள் நம்மைப் பாதுகாத்து, உள்ளிருந்து நாம் தரும் துன்பங்களையெல்லாம் பொறுமையுடன் தாங்கி, தான் ஆசைப் பட்டவற்றை உண்ணாமல், உறங்காமல் அனைத்தையும் தியாகம் செய்து, பூமியில் நாம் ஜனிக்கக் காரணமாக விளங்குபவள் தாய். நாம் பிறந்தவுடன் அள்ளியணைத்து முத்தமிட்டு, தான்பட்ட கஷ்டங் களையெல்லாம் மறந்து பாலூட்டி சீராட்டி வளர்ப்பவள் தாய்.
தாய்க்கு ஒரு மகன் எழுதிய கவிதை வரிகள்: "அடுத்த ஜென்மத்தில் என் தாய்க்கு காலணிகளாய்ப் பிறக்க ஆசைப்படுகிறேன். என்னைக் கருவறையில் சுமந்த என் தாயை நான் சுமக்க அது ஒன்றே வழி.' இப்படி தாயின் பெருமைகளைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். நாம் பிறந்தநேரம் தாய்க்கு நல்லது செய்யுமா? தாய்வழி உறவினர்களி டையே பந்தம் நீடிக்குமா? தாயின் உடல் ஆரோக்கியம் எப்படியிருக்கும்? நம்மால் அவளுக்கு அனுகூலம் உண்டா? அவளால் நமக்கு நற்பலன் விளையுமா என்பதைப் பற்றியெல்லாம் ஜோதிடம் என்ற காலக் கண்ணாடியின் மூலம் தெளிவாக அறியலாம்.
இதற்கு உறுதுணையாக இருப்பது அவரவரின் ஜனன ஜாதகத்தில் அமையும் 4-ஆம் பாவமே. நவகிர கங்களில் தாய்க்காரகனாக விளங் குபவர் சந்திரன். ஒருவரது ஜாதகத்தில் 4-ஆம் பாவமும், சந்திரனும் பலமாக அமைவது, ஜாதகரைப் பெற்ற தாய்க்கு அனுகூலத்தை ஏற்படுத்தும். தாயால் ஜாதகருக்குக் கிடைக்கவேண்டிய அனைத்து நற்பலன்களையும் உண்டாக்கும். 4-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதும், நட்பு கிரக வீட்டில் அமைந்திருப்பதும் சிறப்பு. நட்பு கிரகச் சேர்க்கைப் பெற்றிருப்பதும், குரு போன்ற சுபகிரகப் பார்வையுடன் 4-ஆம் அதிபதியும் சந்திரனும் பலமாக அமையப் பெற்றிருப்பதும், தாய்க்கு நீண்ட ஆயுளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாய்க்காரகன் சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்றோ, நட்பு வீட்டில் அமையப்பெற்றோ இருந் தால் தாய்க்கு ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
4-ஆம் அதிபதி பலம்பெற்று, திரிகோணாதிபதிகளாகிய 5, 9-ஆம் அதிபதிகளின் சேர்க்கைப்பெற்று, அந்த கிரகங்களுக்கு சந்திரனின் தொடர்பிருந்தால், ஜாதகருக்கு தாயால் அனைத்து நற்பலன்களும், செல்வம் மற்றும் செல்வாக்குகளும் கிடைக்கப் பெறும். தாய்வழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் அனுசரணையும் ஆதரவும் சிறப்பாக இருக்கும். குழந்தைப் பிறப்பென்பது தாய்க்கு மறு ஜென்மம் என்றே கூறலாம். எல்லா பெண்களுக்கும் எளிதாகக் குழந்தை பிறந்துவிடுவதில்லை. சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் சூழ்நிலையும் உண்டாகிறது.
பிறக்கும் குழந்தையின் 4-ஆம் பாவம் பாதிக்கப் பட்டோ, சுபர் பார்வையின்றி இருந்தாலோ, சனி பார்வை மற்றும் கிரகணங்களை ஏற்படுத்தக் கூடிய ராகு, கேது சேர்க்கை பெற்றோ சந்திரன் இருந்தாலோ பிரசவத்தில் மிகவும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில குழந்தைகள் பிறக்கும்போதே தாயை இழக்கும் சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு என்ன காரணம் என ஜோதிடரீதியாகப் பார்க் கும்போது 4-ஆம் அதிபதி நீசம் பெற்றிருந்து, சந்திரன் பலவீனமாக இருந்து, சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்று சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத் திரங்களில் பிறந்திருந்தால், முதலில் சந்திர தசை நடக்கும். அதுவே தாய்க்கு கண்டத்தைக் கொடுக்கும். 4-ஆம் பாவமும் சந்திரனும் பாதிக்கப்பட்டு அந்த கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெறும் காலங்களில் தாய்க்கு பாதிப்புகளை உண்டாக்கும். மேலே குறிப்பிட்ட காலத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்றவை நடைபெற்றாலும் தாய்க்கு மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும்.
தூய்மையானது தாய்மை. அதேசமயம் குழந்தையை இழிவுபடுத்தக்கூடிய சிலரும் தாய் என்ற பெயரில் உலா வந்துகொண்டுதான் இருக்கின்றனர். தாயாலேயே கொடுமைகளை அனுபவிக்கும் குழந்தைகளும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறந்தவுடன் குப்பைத் தொட்டியில் போடுவது, கொடுமைப்படுத்துவது, மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு பெற்ற பிள்ளைகளையே விரோதியாக நினைப்பது போன்ற குரூர குணங்களைக் கொண்ட தாய் அமையக் காரணம் என்னவென்று ஜோதிட ரீதியாக ஆராயும்போது, 4-ஆம் அதிபதியும் சந்திரனும் 6-ஆம் வீட்டிலோ, பாதக ஸ்தானத் திலோ அமையப் பெற்றிருந்தாலும், 4-ஆம் அதிபதியும், 6-ஆம் அதிபதியும் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் தாயாலேயே பிள்ளைகளுக்குத் துன்பம் உண்டாகும். காலபுருஷ தத்துவப்படி 4-ஆம் பாவம் கடக ராசியாகும். அதுவே சந்திரனின் சொந்த வீடாகும். கடகத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் தாய்க்கு பாதிப்பு, தாய்வழி உறவினர் வகையில் பகை உண்டாகும்.