இயற்கையோடு சேர்ந்து இறைவன் செய்யும் அற்புதங்கள் அருகிலிருந்தாலும் நம் கண்களுக்குப் புலனாவதில்லை. யாராவது சொன்னால்தான் தெரியவருகிறது.
எங்கு நின்றாலும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைக்காற்று நம்மை வருடி சுகானுபவத்தைத் தருகிறது. சிவபுராணத்தைப் பாடியபடி பத்து பேர் கொண்ட குழுக்களாகச் செல்லும் பக்தர்களின் அதிசயக் காட்சி! பிற சொற்களைப் பேசாமல், "ஓம் நமசிவாய' என்று தொடர்ந்து உச்சரித்தவாறே நகர்ந்து செல்லும் பக்தர்கள் கூட்டம் ஒரு பக்கத்தில்..! இவற்றையெல்லாம் காணவேண்டுமென்றால் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமலையருகே செல்லவேண்டும். இதற்கு ஔடத சித்தர் மலை என்ற பெயரும் உண்டு.
மலையும் மலைசார்ந்த இடமும் முருகப் பெருமானுக்குரிய குறிஞ்சி நிலப்பகுதியாகக் கூறப்படும் நிலையில், வயலும் வயல்சார்ந்த இடமும் சேர்ந்த மருதமும், குறிஞ்சி நில பாகமும் சேர்ந்து அமைந்து, சிவகுடும்பத்தை மனம்குளிர தரிசித்துச் செல்லும்படி வித்தியாசமான தலமாக விளங்குகிறது இது. சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுள்ள இப்பகுதி, புராதன வரலாற்றுக் குறிப்புகளின் படி அரசன் கழனி என்று அழைக்கப்படுகிறது.
அரசன் வழங்கிய நிலப்பகுதி
ஒரு நாட்டின் சிறுபகுதியாகவுள்ள மாகாணத்தை ஆட்சி செய்யும்போது, அங்குள்ள அறநிலையங்கள், கோவில்கள், மடாலயங்கள், அன்னதான சத்திரங்கள், திருக்குளங்கள், வைத்தியசாலைகள், கல்விச்சாலைகள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கு அரசன் தேவையான நிதியாதாரங்களை வழங்கவேண்டும். இங்கே மூன்றாம் குலோத்துங்க மன்னன் பரம்பரையில் வந்த குறுநில மன்னன், தன் ஆளுகைக்கு உட்பட்ட கிராமப்பகுதி மக்கள் நிதியாதாரம் பெறவும், ஆலயங்களைப் பராமரிப்பதற்கும் நன்செய் நிலங்களை தானமாகக் கொடுத்து விவசாயத்தைப் பெருக்குமாறு கூறினான்.
இதற்காகப் பனை ஓலையில் அவர்களுக்கு நிலவுரிமைச் சட்டம் இயற்றிப் பட்டயமும் எழுதிக் கொடுத்தான். பழங்காலத்தில் நெல்விளையும் பூமி "கழனி' என்ற சொல்லால் பேசப்பட்டது. அரசன் தானமாக வழங்கிய நிலப்பகுதி "அரசன் கழனி' என வழங்கப்பட்டு ஊரின் பெயராக நிலைத்தது.
மலையில் அருளும் மகேஸ்வரன்
பாரத தேசத்தில் பல்லாயிரக்கணக்கில் சிவலிங்கத் திருமேனிகள் தேவதச்சன் மயனால் செய்யப்பட்டு ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கின்றன என்றும், கலியுகத்தில் லிங்கத் திருமேனிகளே செய்தல் வேண்டாம் என்றும் மகான் ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார்.
அவரது திருவாக்கில் வந்த லிங்க எண்ணிக்கைகளுள் ஒன்றே மலையுச்சியில் உள்ளதாக இங்குள்ள பக்தர்களின் கர்ணபரம்பரைச் செய்தி. பல்லாண்டு காலம் சிவாலய வழிபாடு நடைபெற்றதற்கு அடையாளமாகக் கற்றளிகளும், மக்கள் பயன்படுத்திய ஆட்டுக்கல், கற்பாண்டங்கள், திருக்குளப் பகுதியில் சிற்பங்களும் காணக் கிடைக்கின்றன. சிதிலமடைந்த மகாமண்டபம், அர்த்தமண்டபத் தூண்களும் இத்தலத்தின் பழமையை உணர்த்தும் சின்னங்களாகத் தெரிகின்றன. தொண்டை மண்டலத்து மன்னன் குலோத்துங்கனின் இரண்டாவது வம்சாவளியில் வந்தவனும், பல்லவர் காலத்திய குறுநில மன்னர்களும் ஆட்சிபுரிந்தபோது, இங்கே படைகளோடு தங்கி பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்திய போது, சிவாலயம் அமைத்து வழிபாடு நடத்தியதை அறியமுடிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் இங்குள்ள கிராம மக்கள் மலையிலும், அருகிலுள்ள சிவன் சந்நிதியிலும் அகண்ட தீபமேற்றி வழிபட்டுள்ளனர். மகிழ்ச்சி தரும் மகேசன் இறைவனது திருநாமம் கல்யாண பசுபதீஸ்வரர். மூன்றடி உயரத்தில் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார். "கல்யாண' என்ற சொல்லுக்கு திருமணம், மகிழ்ச்சி என்று பொருள். "சொற்றுணை வேதியன்' என்று ஞானசம்பந்தர் பாடியபடி துதித்தால், நல்ல வாழ்க்கைத் துணையைத் தருவார் என்பது நம்பிக்கை.
தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்ட அமைப்புகள் இங்கே காணப்படுவதால், நேரில் காணும் பக்தர்களுக்கே இங்குள்ள அற்புதங்கள் புரியவரும். சிவபக்தர்களால் எழுதப்பட்ட ஐந்தரை கோடி சிவநாமம் ஆதாரபீடத்தில் வைத்து பிரதிட்டை செய்யப்பட்ட சிவலிங்கமே மலையில் காட்சி தருகிறது. அதிலிருந்து வரும் மின்காந்த அலைகள் கிரிவலப்பாதை முழுவதும் பரவுகிறது. அகத்திய முனிவரால் துதிக்கப்பட்ட சிவலிங்கம் என்பதால் ஆற்றல் மிகுந்ததாகக் கருதப்படுகிறது.
சிவன் சந்நிதியில் நந்தி தேவர் சிவபெருமானை நேரில் கண்டவாறு எப்போதும் சிவன் துதியைப் பாடிக் கொண்டிருக்கிறார். பிரதோஷ காலத்தில் பக்தகோடிகள் இங்கே கூடி திருவலம் வருவர்.
அம்பிகையின் திருப்பார்வை
பசுபதீஸ்வரர் அருகே தென்முகமாய் காட்சி தரும் பெரியநாயகி மூன்றடி உயரத்தில் அபய, வரத முத்திரையோடு அருள் பாலிக்கிறாள். பௌர்ணமியன்று தேவியின்முன் மூன்று நெய்தீபங்கள் ஏற்றி சக்தியின் துதியைப் படித்துப் பிரார்த்தனை செய்திட, கணவன் - மனைவி ஒற்றுமை, வாழ்வில் எதிர்பார்க்கும் இனிய நிகழ்வுகள் நடந்தேறும் என்பது நம்பிக்கை.
திருச்சுற்று வரும்போது அகத்தியர் காட்சியளிக்கிறார். அருகே அமிர்த புஷ்கரணி கண்ணாடித் தரைபோல் உள்ளது. கிழக்கில் வனதுர்க்காதேவியும் முகப்பில் பாலகணபதி, பாலமுருகனும் உள்ளனர். தென்முகக் கடவுளான மேதா தட்சிணாமூர்த்தி அமிர்த நீரைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். ஈசனது கோஷ்ட பாகத்தின் பின்புறம் லிங்கோத்பவ மூர்த்தியும் வடபாகத்தில் ஸ்ரீவிஷ்ணு துர்க்கையும் உள்ளனர். நான்கு பட்டையுடன் இருநிலை கொண்ட வேதவிமானம் சுவாமிக்கு அமைந்துள்ளது.
வளரி எடுத்தல் விழா
அமிர்த புஷ்கரணியின் கிழக்குக் கரையில் கங்கைதேவி கோவில் அமைந்திருக்கிறது. ஆடிமாத்தில் மூன்றாவது வாரம் இங்கே பரம்பரையாக வாழ்ந்துவரும் முத்திரை சமுதாயத்தினர் கங்கை திரட்டும் வைபவத்தை நடத்தி, அத்துடன் வளரி எடுத்துக் கொண்டு ஊர்வலம் வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். இவர்கள் இத்தலத்தில் சிவாலய பாரமரிப்பிலுள்ள பாளையக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தை மாத பூசத்திருநாளன்று மூன்று ஏக்கர் பரப்பளவுள்ள திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
கிரிவலம் எனும் இறைவலம்
பௌர்ணமி நாள் ஒவ்வொரு மாதமும் வருகையில், பக்திப் பரவம்தான் இங்கே! மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வாசலில் விநாயகரை வழிபட்டு, பிறகு ஊரிலுள்ள சிறு கிராம தெய்வங்களை வணங்கி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு மலையைச் சுற்றி வருவார்கள்.
வலம் வரும்போது ஸ்ரீபெரியாண்டவர் திருக்கூட்டம் என்னும் பக்தர்கள் குழு, கயிலாய வாத்தியம் என்னும் மங்கள வாத்தியத்துடன் தேவாரம், திருமுறைப் பாடல்களையும், சிவசக்தி நாம சங்கீர்த்தனமும் பாடியபடியே வருவார்கள். மலைவல நிறைவில் தீப ஆராதனை நடைபெற்று பெரியாண்டவர் திருக்கூட்டத்தின் சார்பில் அன்னதான சேவை நடைபெறுகிறது.
பெரியாண்டவரைக் குலதெய்வமாக உடையவர்கள் இத்தலத்தில் தங்கள் வருடாந்திர பிரார்த்தனைகளைச் செய்கின்றனர். ஒரு மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று திருவாசக முற்றோதலும், அட்சய பாத்திரம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பக்தர்கள் வழிபாட்டிற்காக காலை 8.00 மணிமுதல் 11.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. தொழில் மேன்மை, குடும்ப நலம், திருமணத் தடைநீக்கம் ஆகிய பலன் வேண்டி பக்தர்கள் இத்தலம் வருகிறார்கள். தல விருட்சமாக நாகலிங்கமும், வில்வமரமும் உள்ளன. ரட்சகராக நாகராஜர் வீற்றுள்ளார்.
அரசன் கழனி சிவாலயம் மற்றும் மலையைக் காண, சென்னை - தாம்பரத்திலிருந்து காரணை செல்லும் 105 எண் பேருந்து, சைதாப்பேட்டையிலிருந்து 51பி ஒட்டியம்பாக்கம் நகரப் பேருந்தில் போகலாம். மேடவாக்கம் - சிறுசேரி சிப்காட் வழியில் உள்ளது. தாம்பரம் ரயிலடியிலிருந்து 12 கிலோ மீட்டரில் இத்தலம் இருக்கிறது.
- கே. குமார சிவாச்சாரியார்