'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதிலிருந்து, "100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கொள்ளை நோய் வரும். மக்கள் கொத்துக்கொத்தாகச் சாவார்கள். இது வரலாற்றில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு காலத்தில் காலரா என்கின்ற கொள்ளை நோய் வந்தது. ஒரு காலத்தில் ஃபிளேக் என்கின்ற நோய் வந்தது. இப்படி கொள்ளை நோய்கள் வருவதும், கொத்துக்கொத்தாக மக்கள் சாவதும், இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து நடந்து கொண்டு தான் வருகிறது.
ஆனால், இப்போது வந்த கொள்ளை நோய் வேறொன்றுமில்லை. வெறும் காய்ச்சல் தான். காய்ச்சல் கண்டவுடனே இருமல் தான். சுவாசிக்க முடியாமல் திணறுகிறான் காய்ச்சல் வந்து. நுரையீரல் பழுதுபட்டு விடுகிறது. வெண்டிலேட்டரிலே அவனைத் தூக்கி வைக்கிறார்கள். அடுத்த நாள் வீட்டுக்கு கொண்டு போ என்று சொல்கிறார்கள். இது காணக் கிடைத்தக் காட்சியாக மாறிவிட்டது. திருஞானசம்பந்தர் சமயக் குறவர்களில் முதல் குறவர்.
அவர் இன்னைக்கு கொங்கு நாட்டுல திருச்செங்கோடு என்று சொல்லக் கூடிய இடத்துக்கு ஒருநாள் போகிறார். அங்கே இருக்கிற இறைவன், அர்த்தநாரியாக இருக்கிறான். இடஒதுக்கீட்டை முதலில் கொடுத்தது சிவபெருமான்தான். அம்பாளுக்கு உடம்பில் பாதி இடத்தைக் கொடுத்துவிட்டார். நாக்கில் இடம் கொடுத்துட்டாரு பிரம்மா. மார்பில் இடம் கொடுத்துட்டாரு திருமான். இப்படி இடஒதுக்கீடு பக்தியிலும் இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரர் கைக்கூப்பிட்டு வணங்கி, அவர் கோயிலிலே உட்கார்ந்திருக்கிறார். கோயிலில் யாரையும் காணவில்லை.
இது என்ன வெட்டவெளி. பாலைவனம் போல கோயில் இருக்கிறது. யாரையுமே காணவில்லையே. என்ன பிரச்சனை என்று கேட்டார் திருஞானசம்பந்தர். ஒன்றுமில்லை, என்னென்ன பிரச்சனை என்று கேட்டால், இந்த ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் ஜுரம், காய்ச்சல். அதனால் அவர்கள் கோயிலுக்கு வராமல் இருக்கிறார்கள். கோயிலுக்கு வர முடியவில்லை. அவர்களுடைய நோயும், அவர்களுடைய இயலாமையும், அவர்களை வீட்டிலேயே கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.
அப்படி என்று சொன்ன உடனே மள மள என ஒரு இடத்தில் நின்று கும்பிட்டு, இந்த ஊர் மக்களுக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறது. இந்த நோய் தீரணுமே என்று சொல்லிட்டு ஞானசம்பந்தம் பெருமான், அன்றைக்கு ஒரு பதிகம் பாடினார். காய்ச்சல், மக்கள் வீட்டுக்குள்ளேயே சிறைப்பட்டு கிடக்கிறார்கள். கோயிலில் வழிபடுவதற்கு ஆளே இல்லை. கோயில் வெட்ட வெளி வானம் போல இருக்கிறது. ஏன் இப்படி ஒரு நிலைமை என்று கேட்ட உடனே மக்களுக்கு காய்ச்சல் என்று சொன்னவுடன் ஞானசம்பந்தபெருமான் இந்த பாட்டை பாடுகிறார். பக்கத்தில் இருந்தவர்களையும் பாடுங்கள் என்றார்.
பிறகு செய்தி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டார்கள். ஆரோக்கியம் அவர்களுக்கு மீண்டும் வந்துவிட்டது என்று திருஞானசம்பந்தருக்கே செய்தி வந்தது. அதற்கு பிறகு சைவப் பெருமக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கை இன்றைக்கும் இருக்கிறது. காய்ச்சல் வந்தால், கடும் குளிர் வந்தால், ஜுரம் வந்தால், திருஞானசம்பந்தரின் பதிகத்தைப் பாடுவது. இந்த நாட்டில் சைவப் பெருமக்கள், இன்றைக்கும் மேற்கொண்டு வருகிற பழக்கம். இது எத்தனை பேருக்கு தெரியும்?" என்று கூறியுள்ளார்.