முனைவர் முருகு பாலமுருகன்
"காலையில் பூத்தால் மாலையில் வாடிவிடுவோம்' என நினைத்து பூக்கள் பூப்பதில்லை. "இன்று பூத்து மணம் வீசி அனைவரையும் மகிழ்விப்போம்' என்ற நம்பிக்கையில்தான் பூக்கின்றன. மனித வாழ்வும் அப்படிதான். வாழும் இந்த நொடி மட்டுமே நிஜம் என்பதை உணர்ந்தாலும், ஆசைகளும் தேவைகளும் அதிகப்படியாகதான் இருக்கின்றன. ஒருவேளை சோற்றுக்குக்கூட வழியில்லாமல் சாலையில் திரியும்போது ஆறுதலுக்கு யாரும் இருக்கமாட்டார்கள். அதேவாழ்வில் உயர்வும் பெயரும் புகழும் வரும்போது உண்ண நேரமிருக்காது. சுதந்திரமாக வீட்டைவிட்டு வெளியே வரக்கூட முடியாது. கைதிக்கு ஸ்பெஷல் அறை கொடுத்தது போலிருக்கும் வாழ்க்கை. நேரத்திற்கு சாப்பிட்டோம், சுகமாக வாழ்ந்தோம் எனக் கூறுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவையனைத்தையும் அவரவரின் ஜனன ஜாதகமே நிர்ணயிக்கின்றது.
ஜோதிடரீதியாக ஒருவரின் ஜனன ஜாதகத்தில் பலமான கிரக அமைப்புகள் இருந்தால் மட்டுமே சுகபோகமான வாழ்க்கை அமையும். 12 வீடுகளில் 9 கிரகங்களும் வலுப்பெற்று அமையப்பெறுவது கோடியில் ஒருவருக்குதான் நடக்கும். அப்படி அமைந்துவிட்டால் அவருக்கு தேவர்களுக்கு ஒப்பான வாழ்க்கை அமையும். ஆனால் வாழ்க்கை என்பது சதுரங்க விளையாட்டு போன்றது. எப்பொழுது முன்னேறுவோம்- எப்பொழுது வெட்டுப்பட்டு வீழ்வோம் என நமக்கே தெரியாது. ஒருவர் எந்த லக்னத்தில் பிறக்கின்றாரோ அந்த லக்ன பாவத்தைக் கொண்டு அவரின் தலையெழுத்தை நிர்ணயிக்கமுடியும். அதேபோல், லக்னாதிபதி அமையும் இடத்தைப் பொருத்தும் அவரது குணநலன்கள், தோற்றம், முகப்பொலிவு, உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியம், அவரின் வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறியமுடியும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த லக்னாதிபதி எந்த கிரகச் சேர்க்கைப் பெற்றால் நல்லது என பார்க்கும்போது, அதில் பல நுணுக்கங்கள் உள்ளன.
லக்னாதிபதி கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகளின் சேர்க்கைப் பெறுவது சிறப்பு. லக்னாதிபதி சேர்க்கைப்பெறும் கிரகங்கள் சுபகிரகம் மட்டுமின்றி, லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாகவும் இருக்கவேண்டும். நவகிரகங்களில் குரு, சுக்கிரன், சுபர் சேர்க்கை பெற்ற புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை சுப கிரகங்கள். சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது, அசுபர் சேர்க்கைப்பெற்ற புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை பாவகிரகங்கள் ஆகும்.சூரியன், குரு, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு. அதேபோல சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்களும் ஒன்றுக்கொன்று நட்பு. நட்பு கிரகங்கள் ஒன்றுக்கொன்று இணைவதும், ஒருவர் வீட்டில் மற்றொருவர் அமைந்து பரிவர்த்தனைப் பெறுவதும் நல்ல யோகத்தை உண்டாக்கும். லக்னத்தில் சுபர் இருந்தால் சிறப்பென்றாலும், சுபகிரகமான குரு- மேஷம், கடகம், சிம்மம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்திலேயே அமையும்போது ஏற்படுத்தும் பலன் ஒருவிதமாகவும், ரிஷபம், துலாம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் அமையும்போது ஏற்படுத்தும் பலன் ஒருவிதமாகவும் மாறிவிடும்.
எடுத்துக்காட்டாக மேஷம், கடகம், சிம்ம லக்னங்களில் பிறந்தவர்களுக்கு குரு லக்னாதிபதிக்கு நட்பு என்பதால் நற்பலனைத் தரும். ரிஷப, துலா லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரனுக்கு குரு பகை என்பதால் அவ்வளவு சிறப்பான பலனைத் தரமாட்டார். ஆதலால் லக்னாதிபதியுடன் சேர்க்கைப் பெறும் கிரகம் சுபராக இருப்பது மட்டுமின்றி, லக்னத்திற்கும் சுபராக இருக்கவேண்டும். பொதுவாக ஒரு லக்னத்தில் பாவ கிரகம் அமைவது கெடுதியாகும். சனி பாவகிரகம் என்பதால் மேஷம், விருச்சிகம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் அமைந்தால் கெடுதலை ஏற்படுத்தும். அதுவே கன்னி, துலாம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்திலேயே சனி அமையும்போது சோம்பல்தனமும், முன்னேற்றத்தடைகளும் ஏற்படும் என்றாலும் நற்பலனைத் தருவார்.