கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வழியாக மணிமுக்தாறு செல்கிறது. விருத்தாசலம் தல தீர்த்தமான மணிமுத்தாற்றில் நீராடி மூலவர் விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால், கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதுடன் சகல தோஷங்களும், ரோகங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இந்த நதியில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைத்தால் அது சுண்ணாம்பு கற்களாக மாறி இங்கேயே தங்கிவிடுவதாக தல புராணம் கூறுகிறது. 'காசியைவிடவும் வீசம் பெருசு விருத்தகாசி' என்ற பெருமையை உடையது இந்த மணிமுக்தாறு. முத்தியைத் தருகின்ற முக்தா நதி, விருத்தாசலம் நகரை இரண்டாக பிரித்துக்கொண்டு விருத்தகிரீஸ்வரரை வலமாகச் சூழ்ந்து ஓடி நகருக்கு அழகு சேர்க்கிறது.
சுந்தரர், இறைவனைப் பாடி பெற்ற 12,000 பொற்காசுகளை எடுத்துக்கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்றெண்ணி சிவபெருமானிடம், இந்தப் பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று முறையிட, பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுக்தாற்றில் வீசிவிட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் பெற்றுக்கொள்ளும்படி அருளினார். சிவகாமி அம்மையார் என்பவருக்குத் திருக்கோயிலில் விளக்கேற்ற எண்ணெய்க்குப் பதில் மணிமுக்தாற்றின் புண்ணிய மேட்டில் தீர்த்தம் எடுத்து விளக்கேற்ற அருள் பாலித்தார் விருத்தாம்பிகை அம்மன்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆறு வற்றாத ஜீவ நதியாக ஓட வேண்டும் என்று எண்ணி விருத்தகிரீஸ்வரர் அர்த்தஜாம அடியார் வளர்ச்சிக் குழு சார்பில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலை மணிமுத்தாறு வற்றாத ஜீவநதியாக அனைத்து நாட்களிலும் தண்ணீர் நிரம்பி ஓட மணிமுக்தாறு படித்துறையில், (காசியில் கங்கை நதிக்கு ஆரத்தி எடுப்பது போல) ஆரத்தி எடுக்கும் விழா நடந்தது. அப்போது மணிமுக்தா அன்னையிடம் 'வற்றாத ஜீவ நதியாக ஓட வேண்டும்' என வேண்டி வழிபாடு செய்து சிவாச்சாரியர்கள் ஆரத்தி எடுக்க, கூடியிருந்த பக்தர்கள் நெய் தீபமேற்றினர். அப்போது திடீரென மழை தூறல்கள் தூர, பக்தர்கள் பக்தி பரவசத்தில் 'ஓம் நமசிவாய' கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.