
ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் பரிகாரங்கள் எப்படி இருக்க வேண்டுமென்று ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
ஜோதிடத்தில் மிக முக்கியமானது பரிகாரம். மருத்துவர் ஒருவர் வியாதியை மட்டும் கண்டுபிடித்து சொல்லாமல் அந்த வியாதி குணமடைய மருந்து கொடுக்க வேண்டும். அதுபோல ஜாதகத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று ஜோதிடரை அணுகினால் அவர் அதற்கான தீர்வை சொல்லுவார். ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் பாதிக்கப்பட்ட நபரின் முன் ஜென்ம வினைப்பயனைச் சரி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாத பரிகாரங்கள் பரியாசமாகத்தான் இருக்கும். மக்களுக்கு நம்பிக்கை வராது.
பெரும்பாலும் ஜோதிடர்கள் வெற்றிலை, எலும்பிச்சை, கொண்டைக் கடலை உள்ளிட்ட மாலைகளை எழுதிக்கொடுத்து மக்களை அனுப்பி விடுவார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இது போன்ற பரிகாரங்களுக்கு பிரமாணம் இருக்காது. அவை எல்லாம் ஜோதிடர்களின் விருப்பத்திற்கேற்ப செய்யும் பரிகாரங்களாக இருக்கிறது. ஜோதிடத்தின் அடிப்படையில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதுதான் சரியான பரிகாரமாக இருக்கும். மேற்கண்ட மாலைகளைப் போடுவதன் மூலம் எந்த பயனும் இருக்காது. இதை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்திருக்கிறேன்.
சமீபகாலமாகக் கொண்டைக் கடலை மாலையை பரிகாரமாகச் சொல்லி வருகின்றனர். எந்த பொருளும் வீணாவதை கடவுள் விரும்ப மாட்டார். அதை அவித்து பிறக்கு கொடுத்தால் கூட நல்ல பரிகாரமாக அமையும். அதைவிட்டுவிட்டு மாலை செய்து குரு பகவானுக்கு போடுவதில் பயன் இருக்காது. பிறர் உபயோகப்படும் வகையில் தானம் தருவதுதான் சிறந்த பரிகாரம். இதைத்தான் கடவுளும் விரும்புவார். வீணடிக்க கூடிய பரிகாரங்களை கடவுள் விரும்ப மாட்டார். பரிகாரம் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர வெறும் மூட நம்பிக்கையாக மட்டும் இருக்கக் கூடாது. இல்லாத பரிகாரங்கள் ஜோதிடர்கள் சொல்வதால் மக்கள்தான் ஏமாற்றம் அடைகிறார்கள். அதனால் சரியான பரிகாரங்களை ஜோதிடர்கள் சொல்ல வேண்டும்” என்றார்.