"ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.'
மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் காரணமாக இருப்பது பிரபஞ்ச சக்தி. இந்த பிரபஞ்ச சக்திகளுக்கெல்லாம் சக்தியளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. ஆனால் உணரமுடியும். அந்த சக்தியைப் பரிபூரணமாக உணர, உருவமாக அமைத்து வழிபடும்போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன.
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்றுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். உலக நன்மைக்காகத் தீமை களை அழித்து நன்மையை வழங்கும் வகையில் பராசக்தி - மகேஸ்வரி, கௌமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை சக்தி ஒன்றே. இந்த தெய்வங்கள் அனைத்தையும் வீட்டிற்கு வரவழைத்து, வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி. அக்காலத்தில் நவராத்திரி வழிபாடு செய்பவர்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் பெறுவார்கள்.
இந்தியாவில் உணவு, உடை, மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும், ஆன்மிகரீதியாக சக்தி வழிபாட்டில் - அதுவும் நவராத்திரி வழிபாட்டில் ஒருமைப்பாடே நிலவுகிறது. நவராத்திரி நாட்களில் சக்தியை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; எதிலும் வெற்றிபெற முடியுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.
நவராத்திரி உலக வளமைக்காகவும், தானியங்கள் செழிக்கவும், செல்வங்கள் பெருகவும், எதிர்ப்புகள் அகலவும் அம்பிகையைப் பிரார்த்தனை செய்து கொண்டு நடத்தப்படுவது. ஒவ்வொரு வருடமும் நான்கு வித நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன.
1. சாரதா நவராத்திரி
புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.
2. வசந்த நவராத்திரி
பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.
3. ஆஷாட நவராத்திரி
ஆடி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி.
4. சியாமளா நவராத்திரி
தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.
ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் வந்தாலும், புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்திரி தான் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும், சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை வழிபடுவதால், இதற்கு சாரதா நவராத்திரி என்று பெயர் ஏற்பட்டது.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துக்கத்தைப் போக்கும் துர்க்கையையும், இரண்டாவது மூன்று நாட்கள் செல்வத்தைப் பொழியும் லட்சுமியையும், மூன்றாவது மூன்று நாட்கள் ஞானத்தை நல்கும் சரஸ்வதியையும் வழிபடுவது வழக்கம். இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலமே நவராத்திரி. நவராத்திரி நாட்களில் பஞ்சபூதங்களுள் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளை வைத்து வழிபட சகல சுகங்களும், பாக்கியங்களும் தேடிவரும். நவராத்திரி நாட்களில், அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கிறார். அந்தந்த நாளுக்கு என்ன வழிபாடு என்பதையும், அதனால் ஏற்படும் சுபப் பலன்களையும் காணலாம்.