Skip to main content

2030 ஆம் ஆண்டில் இது நடக்கும்... ஒட்டுமொத்த மனித குலத்திற்கே ரெட் அலர்ட்!அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

This will happen in 2030 ... Red Alert for the whole of mankind!

 

கடந்த மே மாதம் 20 ஆம் தேதி அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து கடலில் மிதப்பது தொடர்பான செய்தி வெளியாகி சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் புவியின் தட்பவெப்ப நிலை மாற்றம் போன்ற காரணங்களால் மனிதகுலம் மிகப்பெரிய ஆபத்துகளைச் சந்திக்க இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒருபுறம் சீனாவில் பெருவெள்ள பேரிடர்கள் நிகழ்ந்துவரும் நிலையில் அதற்கு நேரெதிராக துருக்கி, அமெரிக்கா, பொலிவியா, கிரீஸ் போன்ற நாடுகளில் காட்டுத்தீ ஆகியவை ஏற்பட்டு வருவதோடு, வறட்சியின் பிடியில் சில நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. இப்படி புவியின் ஒட்டுமொத்த தட்ப வெப்ப நிலையே வழக்கத்திற்கு மாறாக மாறியுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

உலகப் பந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப் பாறைகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. புவி வெப்பமயமாதலை இந்த பனிப்பாறைகள் தடுத்து வருகின்றன. ஆனால் மனிதனின் நவீன வாழ்வியல் முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இப்படி கடல் மட்டம் உயர்வதால் பல நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. கடந்த மே மாதம் 20 ஆம் தேதி அண்டார்டிகாவில் 4,320 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட ஒரு பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியது ஆய்வில் தெரியவந்தது. ஒப்பிட்ட அளவில் புதுதில்லி நகரத்தைப் போன்ற மூன்று மடங்கு அளவு பெரிதான இந்தப் பாறைக்கு ஏ76 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறையானது 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. உலகமே கரோனாவை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் சூழலில் அண்டார்டிகாவில் பனிப்பாறை உடைந்து கடலில் மிதப்பது சூழியல் ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஐ.நா பருவநிலை மாற்றத்திற்கான குழுவில் புவியின் பருவநிலை மாற்றம் தொடர்பாக 234 விஞ்ஞானிகள் சமர்ப்பித்துள்ள மூன்றாயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒட்டுமொத்த மனித குலத்திற்கு விடப்பட்டுள்ள ரெட் அலர்ட்டாகவே பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் அம்சமாக, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும். இதனால் மோசமான நிகழ்வுகளை மனிதகுலம் சந்திக்கும் என்றும், இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கும் என்றும், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீசும் அனல் காற்று தற்பொழுது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீசுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை கைமீறிப் போய்விடும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்