பைடன் வெற்றிபெற்றிருந்தாலும் அது மோசடியான ஒன்று என ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில், பைடன் 290 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், "பைடன் வெற்றிபெற்றிருக்கிறார், ஆனால் அந்த வெற்றி முறைகேடாகப் பெறப்பட்டது. எந்தவொரு பொதுமக்களோ அல்லது பார்வையாளர்களோ வாக்கு எண்ணும் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை, மோசமான இடதுசாரிக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தால் வாக்குகள் அட்டவணைப்படுத்தப்பட்டன" எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவரை தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப் முதன்முறையாக பைடன் வெற்றிபெற்றுள்ளார் எனக் கூறுவது நேர்மறையான விஷயம் எனக் கூறி வருகின்றனர்.