கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டதாக இந்திய பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார் என அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்திற்கு குறைவான நாட்களே இருப்பதால் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இருதரப்பும் ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டை வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் ட்ரம்ப் பேசும்போது, "கரோனா பரிசோதனையை பிற நாடுகளை விட அதிகளவில் அமெரிக்காவில் தான் செய்துள்ளோம். இதுவரை 4.4 கோடி மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி, கரோனா விவகாரத்தில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கூறி என்னை மிகவும் பாராட்டினார். பைடன் துணை அதிபராக இருக்கும்போது பன்றிக் காய்ச்சல் பரவியது. அதை கட்டுப்படுத்துவதில் அவரது அரசு தோல்வியடைந்தது. அவர் பொறுப்பு வகித்த நேரத்தில் கரோனா வைரஸ் பரவியிருந்தால் நிலைமை இதைவிட மோசமாகியிருக்கும். நான் சீனாவை எதிர்த்தது போல வேறெந்த அதிபரும் எதிர்த்ததில்லை. இடதுசாரிகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்பதே ஜோ பைடனின் விருப்பமாக உள்ளது. அவர் வெற்றி பெற்றால் அது சீனா வெற்றி பெற்றதாகவே அர்த்தம்" எனக் காட்டமாகப் பேசினார்.