ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறி வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைனும் அதற்கு சம்மதித்தது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்திவருவதால் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.