துருக்கியில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கமானது பதிவாகியிருந்தது.
இதையடுத்து அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 6.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் குடியிருப்புக் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை துருக்கியில் 2,470 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2818 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சிரியாவில் 476 பேர் உயிரிழந்த நிலையில், பிற்பகல் 3.45 மணிக்கு மீண்டும் தென்கிழக்கு துருக்கியில் எகினோசு நகரத்தை மையமாக கொண்டு 7.5 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம் பதிவானதால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 தாண்டி உள்ளது.
தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர் நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.