ரஷ்யாவில் கடந்த ஆறு நாட்களாகத் தினமும் 10,000 பேருக்கு மேல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 39 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2.7 லட்சம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளையும் தனது கோரப்பிடியில் போட்டு ஆட்டிப்படைத்து வருகிறது கரோனா. இதில், ரஷ்ய நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கரோனா பரவல், தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த ஆறு நாட்களில் அந்நாட்டில் புதிதாக 60,000 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்நாட்டில் 10,669 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக அந்நாட்டில் இதுவரை 1,87,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி ஐந்தாவது இடத்தில் உள்ளது ரஷ்யா. ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.