மலை உச்சியில் ஹெலிகாப்டர் உரசி விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பயணிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து சொலுகும்பு என்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் 6 பேர் பயணித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் காலை 10 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தனது தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ‘லிக்கு பிகே’ கிராம எல்லையில் உள்ள மலை உச்சியில் ஹெலிகாப்டர் உரசியதில் கீழே விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் பட்டியலை நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டரில் ஒரு நேபாளி மற்றும் 5 மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.