கரோனா தடுப்புமருந்தை தான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே கரோனா தடுப்பில் அலட்சியம் காட்டிவந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ, அந்நாட்டில் ஊரடங்கு உள்ளிட்ட எந்தவிதத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் தீவிரம் காட்டவில்லை. இதனையடுத்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பெரும் பாதிப்புக்குப் பின்னர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் தடுப்பு மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்புமருந்தை தான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து போல்சனாரோ கூறும்போது, “நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். நான் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அது என் உரிமை” என்று தெரிவித்துள்ளார். போல்சனாரோவுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.