இந்திய - சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வருடம் இரு நாடுகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும் இதுவரை எல்லை மோதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என சீனா அறிவிக்கவில்லை.
இந்தியா - சீனா இடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவினைத் தொடர்ந்து, பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் படைகளை விலக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் முதன்முறையாக, கடந்த வருடம் எல்லை மோதலின்போது இறந்த வீரர்கள் தொடர்பான தகவலை சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான பி.எல்.ஏ டெய்லி, "2020 ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த இந்தியாவுடனான எல்லை மோதலில் தியாகம் செய்ததற்காக, காரகோரம் மலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து சீன எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்கள், சீன மத்திய இராணுவ ஆணையத்தால் (சிஎம்சி) கௌரவிக்கப்பட்டனர்" என செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் முதல்முறையாக இந்தியாவுடனான எல்லை மோதலில் சீன வீரர்கள் உயிரிழந்ததை சீனா ஒப்புக்கொண்டுள்ளது.