சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 26ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடைபெற உள்ளது. ஜூலை 26ஆம் தேதி தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தச் சர்வதேச போட்டியில், உலகம் முழுவதும் உள்ள 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏற்றுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐந்து முறை ஒலிம்பிக் பங்கேற்பாளராக இருந்த சரத் கமல் தேசியக்கொடி ஏந்தி செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏற்றி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைவராக மேரி கோம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தலைவராக செயல்படுவார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் மகளிர் வீராங்கனைகளை பி.வி.சிந்து வழி நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் தடகள வீரர்கள் மற்றும் பேட்மிட்டன் போட்டி வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் இருபது நாட்களே இருக்கக்கூடிய நிலையில், பல்வேறு தடகளவீரர்கள் தங்கள் இறுதிக் கட்ட பயிற்சிக்காக வெளிநாடுகள் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ளது.