சீனா அமெரிக்கா இடையேயான மோதல் தொடர்ந்து வரும் சூழலில், இந்தியாவைப் போல தங்களது நாட்டிலும் சீன செயலிகளைத் தடை செய்யும் திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
லடாக் எல்லை பிரச்சனைக்கு பிறகு இந்தியா, சீனா இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், சீனாவுக்கு பொருளாதார ரீதியிலான பதிலடியைக் கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. சீன பொருட்களுக்கான வரிவிதிப்பில் மாற்றம் செய்வது, சீனாவின் இந்திய முதலீடுகளை மறு ஆய்வு செய்வது உள்ளிட்டவற்றை இந்தியா திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில் அண்மையில் 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இந்தியாவின் இந்த செயலால் பல நூறு கோடி வருவாய் இழப்பை சீன நிறுவனங்கள் சந்தித்துள்ள நிலையில், இந்தியாவின் முடிவு கவலையளிப்பதாக சீனா தெரிவித்தது.
இந்நிலையில் இந்தியாவைப் போல தங்களது நாட்டிலும் சீன செயலிகளைத் தடைசெய்யும் திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீன செயலிகள் பயன்பாட்டில் இந்தியாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது குறித்துப் பேசியுள்ள பாம்பியோ, "அதிபர் ட்ரம்ப்புக்கு முன்னால் நான் இதுகுறித்த முடிவுகளை வெளியிட விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதுகுறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.