புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த கற்பகசோலை மரம் பெ.தங்கச்சாமி. இவர் தனது திருமணக் கோலத்தோடு தனது தோட்டத்தில் மரக்கன்று நட்டு தனது இல்லற வாழ்வைத் தொடங்கினார். அதன் பிறகு தேசிய தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் என அனைவரின் பிறந்த நாள், நினைவு நாள் என எந்த ஒரு நாளுக்கு அவர்கள் நினைவாக ஒரு மரக்கன்றை தன் தோட்டத்தில் நட்டு வைத்தார்.
மழை, வறட்சி அத்தனையும் தாங்கி மரங்களும் வளரத் தொடங்கியது. பழ மரங்களைத் தேடி பறவை வந்து தங்குவதால் மேலும் பலவகை மரக்கன்றுகளுக்கு விதை போட்டது. நட்ட மரங்களைவிடப் பறவைகளால் விதைக்கப்பட்ட மரங்கள் அதிகம். மரங்கள் வளர்ப்பதால் தனக்கு வருமானம் கிடைப்பதை மற்றவர்களிடமும் கொண்டு செல்ல நினைத்து, தான் கலந்து கொள்ளும் திருமணம், காதணி போன்ற விழாக்களில் மரக்கன்றுகளை நடுவதுடன் மணமக்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக கொடுத்தார். தொடர்ந்து பள்ளி, அலுவலகங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம், ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாக்களைத் தொடங்கி வைத்தார். இப்படித் தொடங்கிய இவரது இயற்கை பயணம் தமிழ்நாடு முழுவது விரிவடைந்தது.
ஆண்டுக்கு ஒரு முறை சைக்கிளில் தமிழகம் முழுவதும் சுற்றி மரக்கன்றுகளை நடுவதுடன் பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை வளர்க்க விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாருடன் தொடர்ந்து பயணித்தார். இப்படியாக தொடர்ந்த அவரது பயணத்தில் விழாக்களில் தாம்பூலப் பைக்கு பதில் மரக்கன்றுகளைக் கொடுக்க வைத்தார். இளைஞர்கள் ஆர்வமாக மரக்கன்றுகள் நட விழிப்படைந்தனர். இவரது இந்த செயல் இன்றும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் விழாக்களில் மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர்.
'மரப்பயிரும் பணப்பயிரே' என்ற வாசகத்துடன் தொடங்கிய அவரது புரட்சிப் பயணம் அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. இவரது இந்தப் பயணத்தைத் தொடர்ந்த கடந்த சில வருடங்களாக இவரது பெயரில் தமிழகத்தின் பல ஊர்களிலும் குருங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரம் தங்கச்சாமி நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் 1.67 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.
இதே போல புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் கைஃபா மற்றும் நாம் தமிழர் கட்சியினர், இளைஞர்கள் இணைந்து நூற்றுக்கணக்கான தேக்கு மற்றும் மிளகு கன்றுகளைப் பொதுமக்கள் பஸ் பயணிகளிடம் வழங்கினர்.