கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட்டு அதற்கான சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று நாட்களில் இதுவரை 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதல் மூன்று நாட்களில் 36.06 லட்சங்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 34,350 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். ரேஷன் கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பம் பதிவு செய்ய தன்னார்வலர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு முகாமிலும் விண்ணப்பங்களை சரிபார்க்க மற்றும் பூர்த்தி செய்யப்படாதவற்றை பூர்த்தி செய்ய உதவி மையமும் உள்ளது. ஒவ்வொரு உதவி மையத்திலும் ஒரு தன்னார்வலர் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவி செய்து வருகிறார். மீதமுள்ள 14,825 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் முகாம் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.