
சென்னை, கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்துசெல்கின்றனர். சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும் கோயம்பேட்டிலிருந்து சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது. எப்போதுமே, பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில், இரவு நேரத்தில் நூற்றுக் கணக்கானோர் தூங்குவார்கள். வெளியூர் செல்ல பஸ் கிடைக்காதவர்கள், வெளியூரிலிருந்து சென்னை திரும்பி, சென்னை புறநகர்ப் பகுதிக்குச் செல்ல முடியாதோர் பலரும், அப்பேருந்து நிலைய வளாகத்திலேயே ஓய்வெடுப்பார்கள்.
இந்தநிலையில், இன்று அதிகாலை, 2 மணி அளவில் ஒரு பெண் அலறும் சத்தம் அனைவரையும் கதிகலங்கச் செய்தது. அந்தப் பெண் தீயில் எரிந்தபடி தரையில் உருண்டு புரண்டு சத்தம் போட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதேநேரத்தில், ஒரு மர்ம நபர் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கதறி அழுததைக் கண்ட பொதுமக்கள் அவர்தான் அந்தப் பெண்ணை தீவைத்து எரித்தார் என்று நினைத்து தர்ம அடிகொடுத்து, காவல்துறையில் ஒப்படைத்தனர்.
காவல்துறையில் பிடித்துகொடுக்கப்பட்ட அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், தீயில் எரிந்த பெண்ணின் பெயர் சாந்தி என்றும், திருமணமாகி கணவரை பிரிந்து ஸ்ரீராம் என்பவரை இரண்டாவதாக மணந்துகொண்டார் என்பதும் தெரியவந்தது. மேலும், இருவரும் அப்பகுதியில் மாநகராட்சி ஒப்பந்தப் பணி செய்துவரும் தூய்மைப் பணியாளர்கள் என்று அந்த நபர் தெரிவித்தார். இந்த நிலையில், அவ்விருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே சாந்தி, முத்து என்ற மற்றொரு தூய்மைப் பணியாளருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துவந்துள்ளார். இவர்கள் இருவரும் பேருந்து நிலைய வளாகத்திலேயே கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகச் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர்.
இதற்கிடையில், இரண்டாவது கணவர் ஸ்ரீராம், சாந்தியுடன் அதே பேருந்து வளாகத்திலேயே மீண்டும் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளார். இதனால், ஏமாற்றம் அடைந்த முத்து, இருவரையும் கொலை செய்யத் திட்டமிட்டு தண்ணீர் கேனில், பெட்ரோல் பிடித்துவந்து இருவர் மீதும் ஊற்றி எரித்துவிட போதையில் திட்டம் தீட்டியுள்ளார். திட்டப்படி பெட்ரோல் கொண்டுவந்தபோது, சாந்தி மட்டுமே வளாகத்தில் படுத்திருந்துள்ளார். இதனைக் கண்ட முத்து, சாந்திமீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். சாந்தி எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராம், ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டபோது ஸ்ரீராம்தான் தீவைத்துவிட்டார் என்று பொதுமக்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில், பேருந்து வளாகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது சாந்தி மீது தீவைத்தது முத்து என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவ்விருவரையும் பிடித்த கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.