நேற்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக பேரவை கூடி இருக்கிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் 25 ஆண்டுகளாக சிறைவாசம் பெற்று வரும் 36 இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''அண்ணாவினுடைய 115 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு பரிசீலனை செய்யும் பொருட்டு 11/8/2023 அன்று முதல் கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை கைதிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் 24/8/2023 ஆளுநருக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவர். ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீதம் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்த பிரச்சனை பற்றி பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து அதிமுக பேசும் பொழுது, நான் கேட்கின்ற ஒரே கேள்வி, நீங்கள் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்ததன் காரணம் என்ன. அதை நான் அறிய விரும்புகிறேன். தருமபுரியில் பேருந்தில் பயணித்த மாணவிகளை உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன் விடுதலை செய்த உங்களுடைய அதிமுக ஆட்சி, ஏன் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதே ஆணவத்தோடு அல்ல, அடக்கத்தோடு நான் கேட்கின்ற கேள்வி'' என்றார்.