பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ரவுடிகளுடன் நட்பு வைத்துக்கொண்டு தமிழகத்தின் பிற இடங்களுக்கும் சென்று கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் போன்ற விவகாரங்களில் ஈடுபடுவதாக வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த வசூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. இவர் மீது வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, சித்தூர் உட்பட பல மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உட்பட பல வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் சிலவற்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார் ராஜா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலிருந்து முன்ஜாமீன் பெற்று வெளியே வந்த ரவுடி வசூர் ராஜா, தலைமறைவானார். சாட்டிலைட் ஃபோன் மற்றும் வாட்ஸ் அப் கால்களில் வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர்களை மிரட்டி பணம் பெற்று சொகுசாக வாழ்ந்துவந்தார்.
இந்நிலையில் ராஜாவை பிடிப்பதற்காக வேலூர் மாவட்ட காவல்துறையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். அப்பொழுதும் போலீசாரிடம் வந்து சரண்டர் ஆகவில்லை. ராஜாவின் குடும்பத்துக்கு காவல்துறை கடுமையான நெருக்கடிகளை தந்தது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி காலை 11 மணி அளவில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வசூர் ராஜா சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வசூர் ராஜா சரணடைந்த தகவலை வேலூர் மாவட்ட காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மற்ற வழக்குகளில் கைது செய்தும் வேறு சில வழக்குகளில் விசாரணை நடத்தவும் முடிவுசெய்து வேலூர் மாவட்ட தனிப்படை போலீசார் சேலம் சென்றுள்ளனர்.