புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (47). தினக் கூலித் தொழிலாளியான இவருக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தன் 3 பெண் குழந்தைகளையும் காப்பகங்களில் சேர்த்து பள்ளிப் படிப்பைப் படிக்க வைத்திருந்தார். மேலும், வயதான அத்தை மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள அத்தை மகள் ஆகியோரும் இவருடன் உள்ளனர். செல்வராஜின் உழைப்பில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2018 கஜா புயலுக்கு பிறகு பெய்த கனமழையில் குடியிருந்த வீடு இடிந்து தரைமட்டமானது. இந்த நேரத்தில் அரசு வீடுகள் ஒதுக்கியும் கூடுதல் பணம் செலவு செய்து வீடு கட்ட வசதி இல்லாததால் வேண்டாம் என்று தவிர்த்துள்ளார். அதன் பிறகு இந்த குடும்பம் இடிந்த வீடு அருகே உள்ள மரத்தடியில் சமைத்துத் சாப்பிட்டு வைக்கோல் பந்தலுக்காக அமைக்கப்பட்ட பட்டறையில் புத்தகங்கள், உடைகள் போன்ற பொருட்களை சாக்கு மூட்டையில் கட்டி வைத்து கிழிந்த தார்பாய்களை போட்டு மூடி வைத்துப் பாதுகாத்ததுடன் மேலும் பல உடைமைகளை அரசு கட்டிக் கொடுத்த கழிவறையில் வைத்தும் பாதுகாத்து வருகின்றனர்.
செல்வராஜின் மகள்கள் 3 பேரும் சிறு வயதில் இருந்தே காப்பகங்களில் தங்கி அரசு உதவி பெறும் பள்ளியிலும் அரசுப் பள்ளியிலும் படித்து தற்போது மூத்த பெண் அகரம் பவுண்டேசன் உதவியுடன் சென்னையில் பி.எஸ்.சி நர்சிங் படிக்கிறார். 2வது பெண் அடுத்த வருடம் கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்பதற்காக அதற்கான பணத்தை சேமிக்க தற்போது கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 3வது பெண் புதுக்கோட்டையில் விடுதியில் தங்கி +1 படிக்கிறார். 3 பெண் குழந்தைகளும் ஊருக்கு வரும் போது தங்க இடமில்லாததால் பக்கத்து வீடுகளில் இரவை கழிக்கின்ற நிலையில் உள்ளனர்.
இந்த நிலை பற்றி அறிந்த குலமங்கலம் பாரதப் பறவைகள் அறக்கட்டளை சார்பில் தற்காலிகமாக அந்த குடும்பம் தங்குவதற்கு ஆஸ்பெஸ்டாஸ் மூலம் வீடு கட்டிக் கொடுக்க முன்வந்தனர். இது பற்றிய செய்தி மற்றும் வீடியோக்களை நக்கீரன் இணையத்தில் வெளியிட்டிருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா துரித நடவடிக்கை எடுப்பதாக கூறியதுடன் உடனடியாக அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ததுடன் உடனே அரசு வீடு கட்டுவதற்கான உத்தரவையும் செல்வராஜை நேரில் அழைத்து வழங்கியதுடன் இவ்வளவு வறுமையிலும் பெண் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்கிறீர்கள் அவர்களுக்கு கல்வி தான் நிரந்தர செல்வம். நன்றாக படிக்க வையுங்கள் என்று கூறினார். அரசு வீடு கட்டும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் வீடு இல்லாமல் வறுமையில் வாடும் 13க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் செட் அமைத்து கொடுத்துள்ள குலமங்கலம் பாரத பறவைகள் அமைப்பினர் செல்வராஜுக்கு நிரந்தரமான வீடு கட்டுவதற்கான பணிகள் நடந்து வந்தாலும் மழைக்காலத்தில் இந்த குடும்பம் தங்குவதற்காக ஆஸ்பெஸ்டாஸ் செட் அமைத்துக் கொடுக்க கடந்த மாதம் 22 ந் தேதி பூமி பூஜை போடப்பட்டு தொய்வில்லாமல் ஆஸ்பெட்டாஸ் வீடு கட்டும் பணிகளைச் செய்து முடித்துள்ளனர். ஒரு குடும்பம் தங்கும் அளவிற்கு ஆஸ்பெட்டாஸ் வீடு கட்டி முடித்த நிலையில் நேற்று சனிக்கிழமை பாரதப் பறவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள் வீட்டுக்கு நாடா கட்டி திறப்புவிழா செய்து செல்வராஜிடம் ஒப்படைத்தனர். பல வருடங்களாக வீடு இல்லாமல் மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டு தூங்குவதும், மழைக் காலங்களில் குழந்தைகளை உறவினர் வீடுகளில் தங்க வைத்துவிட்டு பள்ளிக்கூடம், கோயில், கடை வாசலில் இரவை கழித்த செல்வராஜ் புதிய வீட்டைப் பார்த்ததும் கண்கள் கலங்கிப் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து பாரதப் பறவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள் நம்மிடம், “‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கு’ என்ற கொள்கையோடு குலமங்கலம் தெற்கு கிராமத்தில் இளைஞர்களால் தொடங்கப்பட்ட பாரதப் பறவைகள் மன்றம் பிறகு நலிவடைந்தவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகள் செய்து வந்தது. பின்னர் அறக்கட்டளையாக பதிவு செய்தோம். எங்கள் சேவையைப் பார்த்து பல கிராமங்களைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக சேர்ந்து முடிந்த வரை எங்கள் சொந்த செலவில் நலத்திட்டங்கள் வழங்கி வருகிறோம். இதுவரை 14 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம்.
இந்த திருநாளூர் செல்வராஜ் குடும்பம் மரத்தடியில் வாழ்ந்து கழிவறையில் உடமைகளை வைத்திருப்பதை நேரில் பார்த்துக் கலங்கிப் போனோம். அவர்கள் தங்க ஒரு இடம் வேண்டும் என்று தான் உடனே அறக்கட்டளை உறுப்பினர்களுடன் கலந்து பேசி ரூ.90 ஆயிரம் மதிப்பில் ஒரு குடும்பம் தங்கும் அளவில் ஆஸ்பெட்டாஸ் செட் அமைத்து சனிக்கிழமை திறப்பு விழா செய்து கொடுத்தோம். இந்த வீட்டைப் பார்த்ததும் இத்தனை ஆண்டுகள் மரத்தடியிலும் கழிவறையிலும் வாழ்ந்த செல்வராஜ் கண் கலங்கி நன்றி கூறினார். மேலும் நக்கீரன் செய்தியால் மாவட்ட ஆட்சியர் அரசு வீடு வழங்கி ஊராட்சி மன்றத் தலைவர் ஒத்துழைப்போடு அந்தப் பணிகளும் நடப்பது மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது” என்றனர்.