வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட வி.கோட்டா சாலையில், சாலை வசதி, குடிநீர் வசதி, சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்ற தலைவர் பிரேமாவிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இன்று திமுக நிர்வாகி இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேரணாம்பட்டு வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வாகனத்தை மறித்து கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கூறி முறையிட்டு கோஷங்களை எழுப்பினர்.
உடனே அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பிறகு அங்கிருந்து எம்.பி. கதிர் ஆனந்த் புறப்பட்டுச் சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.