புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற இழி செயலை மனித தன்மை கொண்டவர்கள் யாரும் செய்யமாட்டார்கள். யாரோ மனிதத்தன்மையற்ற சமூக விரோதிகள் செய்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேங்கை வயல், இறையூர் கிராம மக்களும், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர்.
முதலில் புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் பிறகு நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேரில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல், இறையூர் உட்பட பல கிராமங்களில் உள்ள சந்தேக நபர்கள் அழைத்து விசாரணை செய்தனர். தொடர்ந்து செல்போன்கள் ஆய்வு, டிஎன்ஏ பரிசோதனை, குரல் பதிவு சோதனைகளும் நடத்தப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய வேண்டியுள்ளது. விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று விசாரணை அதிகாரிகள் கூறி வந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த நபர் ஒரு சீருடைப் பணியாளர் என்பதும் ஏற்கனவே பல விசாரணைகளுக்கு ஆஜரானதுடன் குரல் மாதிரி சோதனைக்கும் சென்று வந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சம்மன் பற்றிய தகவல்கள் பல்வேறு விதமாக வெளியே பரவி வருகிறது. வழக்கு விசாரணை முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இன்னும் சிலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.