கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் வீரராஜ். இவர் தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள சிலரின் நிலங்களுக்குப் பக்கத்து கிராமத்தில் பயிர் செய்யாத விவசாயிகளுக்கு அடங்கல் வழங்கி காப்பீடு செய்ய உதவி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய சங்கங்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் மண்டல துணை வட்டாட்சியர், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள், நான்கு கிராம நிர்வாக அலுவலர்கள், கொண்ட குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியரால் அறிவுறுத்தப்பட்டது. இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் போலி அடங்கல் கொடுத்து காப்பீடு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையின் போது கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ் பாதிக்கப்பட்ட பொதுமக்களைக் கடுமையாக திட்டித் தகராறு செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க சிதம்பரம் சார்- ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில் சிதம்பரம் சார்-ஆட்சியர் ராஷ்மிராணி பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர் போலி அடங்கல் கொடுத்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சார்-ஆட்சியர் ராஷ்மிராணி, கிராம நிர்வாக அலுவலர் வீரராஜை அந்தக் கிராமததில் இருந்து பணி விடுவிப்பு செய்து உத்திரவிட்டார். கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ், தொண்டமாநத்தம் கிராமத்தில் இருந்து பணி விடுவிப்பு செய்யப்பட்டார். இதனை அறிந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பின்னர் அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து வருவாய் துறையினரின் தொடர் விசாரணையில் இருந்து மீள்வதற்கும், அதிகாரிகளை மிரட்டுவதற்காக இவர் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் வேப்பூர் வட்டத்தில் பணிபுரியும் போது இதே போன்று அதிகாரிகளை மிரட்டுவதற்கு பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்று நாடகமாடிய சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொண்டமாநத்தம் கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.