நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.
‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.
பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.