Skip to main content

நெருக்கடி கொடுக்கிறதா பா.ஜ.க.? வைகைச்செல்வன் பேட்டி

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
Vaigai Chelvan




இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
 


ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என டிசம்பர் 3ம் தேதி தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதி இருந்தார். அப்படி இருந்தும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக அரசின் கடிதத்தை புறந்தள்ளியதா தேர்தல் ஆணையம்?
 


கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு முழுமையான நிவாரணப் பணிகள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், தற்போதுள்ள இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தலை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் டிசம்பர் 3ஆம் தேதி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஓரளவு ஏற்றுக்கொண்டது.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கான மேல்முறையீட்டுக்கு காலஅவகாசம் இருந்தது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆகவே 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இந்திய தேர்தல் ஆணையம் தனது சட்டத்தின் அடிப்படையில் தேர்தலை அறிவித்தார்கள்.
 


இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை கண்டு அச்சமடைந்தது. இடைத்தேர்தல் திமுகவுக்கு ஒரு பின்னடைவாக ஆகிவிடுமோ என்ற ஒரு அச்சத்தின் காரணமாகவும் தொடர்ந்து இந்த தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டது. 
 


திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான பணிகளில் அவர்கள் ஈடுபட்டார்களே?



தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டது. அதன் அடிப்படையில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜாவை கேட்டுக்கொண்டு, அவர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலே மனு அளித்து அது தமிழ்நாட்டுக்கு வந்து, அது தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்பட்டு, திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என்ற நிலைப்பாடு வரும்போதுகூட திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரிடமும் இதுகுறித்து கருத்து கேட்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தார். ஆக இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளலாம். தேர்தலை தள்ளிவைக்கும் மனநிலைக்கு திமுக வந்துவிட்டது என்று. 


இடைத்தேர்தல் ரத்து என்றதும், அதனை திமுக தலைவர் வரவேற்றிருக்கிறார். எங்களைப் பொறுத்தமட்டில் தேர்தல் இப்போது வேண்டாம் என்று கடிதம் எழுதினோம். அதனை மீறி தேர்தல் அறிவித்தபிறகு அதனை சந்திக்க தயாராக இருந்தோம். ஆனால் அந்த தேர்தலை முழுமையாக தள்ளிவைப்பதற்கு காரணமாக இருந்தது திமுக மற்றும் எதிர்க்கட்சிகள்.


இடைத்தேர்தல் நடக்காது என தெரிந்துதான் வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி செய்ததா அதிமுக?
 

அப்படி காரணம் இல்லை. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு அளிக்கலாம் என்று தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இரண்டு நாள் போதிய காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அதற்கு பிறகு நேர்காணல் நடத்தப்பட்டது. வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிறு அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் வேட்பாளரை அறிவிக்க இருக்கிறோம் என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அதிமுக அல்ல.
 

கூட்டணிக்காக பாஜக நெருக்கடி கொடுக்கிறதா?


பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.


கூட்டணி வைக்கவில்லை என்றால் இடைத்தேர்தல்தான் என்று பாஜக மிரட்டுவதாக பரவலாக பேச்சு இருக்கிறதே?


பாஜகவுடன் நாங்கள் தொடர்ந்து ராஜரீதியான நட்பை பேணிக்காத்து வருகிறோம். கூட்டணி வைப்பதா? வேண்டாமா? என்பதை எங்களது தலைமைதான் இறுதி முடிவு செய்யும். அதற்கு இன்னும் காலஅவகாசம் இருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அதுகுறித்தான கள நிலவரத்தை அறிந்துதான் அதற்கு உரிய இறுதி முடிவை அதிமுக தலைமை முடிவு செய்யும். இவ்வாறு கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்