தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 9ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (18.09.2024) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்றார். அதே சமயம் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை. இதன் மூலம் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரும், வேந்தருமான ஆர்.என். ரவி மாணவர்களுக்குப் பட்டங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக மும்பை ஐசிஏஆர் - மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சி.என்.ரவிசங்கர் கலந்து கொண்டார். அதே சமயம் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாததால் நாகை மாவட்ட ஆட்சியரும் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக உள்ளிட்ட கட்சியினர் கருப்பு கொடி காட்டினர். முன்னதாக நேற்று, வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் ஆளுநருடன், மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.