சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில், பட்டாசுத் தொழிலில் பாதுகாப்பு குறித்த பங்குதாரர்களின் கலந்துரையாடல் கூட்டம், நாக்பூர் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாடு முதன்மை அதிகாரி பி.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கலந்து கொண்டார்.
அவர், பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். மேலும் இந்நிகழ்ச்சியில், உற்பத்தியாளர்கள் தரப்பில் பட்டாசுத் தொழிலைப் பாதுகாப்பது சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதன்பிறகு, பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சுரேஷ் கோபி, தொழிலாளர்களின் பாதுகாப்பில், அவர்களுடைய ஆரோக்கியத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து சிவகாசியில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வெடிவிபத்து, பொழுது போக்கின் மதிப்பு, விற்பனையின் மதிப்பு, பொருளாதார முன்னேற்றத்தில் பட்டாசுத் தொழில் எவ்வாறு முதன்மை பெறுகிறது, பட்டாசுத் தொழில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது என்பதுதான் முக்கியம். இதைப் பொறுத்தே, பட்டாசுத் தொழில் முதன்மை பெறுகிறது. பட்டாசுத் தொழிலில் புதிய சிந்தனைகளைப் புகுத்தி விபத்தில்லா பட்டாசு, மாசு இல்லாப் பட்டாசை உருவாக்கிட அடித்தளம் அமைக்கின்ற களம் அமைக்கப்பட்டுவிட்டது. இங்கு நடைபெற்ற கலந்துரையாடலை ஆவணப்படுத்தி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் ஒப்படைத்து, பட்டாசுத் தொழிலைத் தொடர்ந்து பாதுகாக்க, தமிழ்நாட்டை, தமிழ்ப் பண்பாட்டினை நேசிக்கும் ஒருவனாக, மலையாளத்தின் மகனாக, அவரிடம் பட்டாசுத் தொழிலைப் பாதுகாத்திட முயற்சிகளை மேற்கொள்வேன்” என்று பேசினார்.