காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக தமிழகம் கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க மத்திய அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன. ஆனாலும், இந்த பிரச்சனை தீர்ந்த பாடில்லை.
அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கர்நாடகா முன்னாள் பா.ஜ.க முதல்வரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சரான குமாரசாமி இன்று (30-09-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மழை பெய்யாத வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது. கிவ் அண்ட் டேக் பாலிசி (Give and Take Policy) தான் காவிரி பிரச்சனைக்கு ஒரே தீர்வு. காவிரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. நீர்ப் பங்கீடு குறித்து இரு மாநிலமும் சுமூகமாக பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.