Skip to main content

“ஒருதலைபட்சமாக” கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துவது ஜனநாயகப் படுகொலை-ஸ்டாலின்

Published on 14/10/2018 | Edited on 14/10/2018

 

STALIN

 

“உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, ஆளும் அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாக மீண்டும் “ஒருதலைபட்சமாக” கூட்டுறவு சங்கத் தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையமும், அதன் அதிகாரிகளும் நடத்தி வருவது ஜனநாயகப் படுகொலை” என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

 கூட்டுறவு சங்கத் தேர்தலில் நடைபெறும் அ.தி.மு.க வினரின் அராஜகத்தை கூட்டுறவுத் தேர்தல் ஆணையமும், அதன் அதிகாரிகளும் தொடர்ந்து மீண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 15.09.2018 அன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கையின் படி, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளிட்ட 197 சங்கங்களுக்கு 2448 நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய நடைபெற்றுள்ள தேர்தலில், வரலாறு காணாத வகையில் முறைகேடுகளிலும் தில்லுமுல்லுகளிலும் அ.தி.மு.க வினர் ஈடுபட்டுள்ளனர். சுதந்திரமான தேர்தலுக்கு வேட்டு வைத்து, அ.தி.மு.க வின் உள்கட்சித் தேர்தல் போல் அல்லது அதைவிட மோசமாக நடத்தியுள்ளனர்.

 

 

 

“94 சதவீத கூட்டுறவு சங்க பதவிகளுக்கு“ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதும், வரலாறு காணாத வகையில் அற்ப சொற்பக் காரணங்களுக்காக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும் வழக்காக வரும் போது, உயர்நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது” என்று தி.மு.க. தொடர்ந்த கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கில் 03.08.2018 அன்று,  அ.தி.மு.க அரசின் உச்சந்தலையில் உயர்நீதிமன்றம் குட்டு வைத்த பிறகும், “அராஜகங்கள்” “அத்துமீறல்கள்” “அதிகார துஷ்பிரயோகம்” போன்றவற்றின் துணையோடு நடைபெறும் இந்த தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது.

 

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தகுந்த காரணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. தி.மு.க.வினர் வெற்றி பெறுவார்கள் என்றால், அந்த  தேர்தலை நடத்தும் அதிகாரியே வராமல் தலைமறைவாகியிருக்கிறார். அ.தி.மு.க வினரின் வேட்பு மனுக்கள் மட்டுமே அமோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக மீண்டும் “ஒருதலைபட்சமாக” கூட்டுறவு சங்கத் தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையமும், அதன் அதிகாரிகளும் நடத்தி வருவது மிகுந்த  கண்டனத்திற்குரியது. இந்த மிக மோசமான ஜனநாயகப் படுகொலையை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்த்து ஆங்காங்கே கழகத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

 

 

திருவாரூர், ஈரோடு, வேலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் நடைபெற்ற முறைகேடான தேர்தல்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனாலும் அ.தி.மு.க வினரை “நிர்வாகக்குழு உறுப்பினர்களாக” ஜனநாயக விரோதமாக தேர்ந்தெடுத்து, அதே அராஜகத்தின் துணையுடன் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களையும் தேர்ந்தெடுத்து விட அந்தந்த பகுதிகளில் உள்ள அமைச்சர்கள் துடிக்கிறார்கள். ஊழல் செய்யத் துடிக்கும் அமைச்சர்களுக்கு கூட்டுறவு தேர்தலை நடத்தும் அதிகாரிகளும், ஆணையமும் அடிபணிந்து சேவகம் செய்து வருவது வெட்கக் கேடான செயலாகும்.

 

 

அ.தி.மு.க வினரின் தில்லுமுல்லுகளுக்குத் துணை போகும் அதிகாரிகள் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்புள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர்  அ.தி.மு.க வினரின் அராஜகங்களுக்கும்,  முறைகேடுகளுக்கும் துணை போயிருப்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய களங்கம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில், பல்வேறு கூட்டுறவு சங்கத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஆகவே, முறைகேடுகளுக்கு வித்திட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் முடியும் வரை 16.10.2018 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்கள் அனைத்தையும் தள்ளி வைக்குமாறு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்