கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சியின் 45-வது வார்டுக்கு உட்பட்டது குஸ்னி பாளையம். இப்பகுதியில், உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலை ஓரம் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ள சாலை வழியாக கழிவுநீர் அகற்றும் லாரி ஒன்று சென்றது. அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் திடீரென பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது. இதில், எதிர்பாராத விதமாக கழிவுநீர் அகற்றும் லாரி சிக்கிக் கொண்டது. பிரமாண்ட மரம் விழுந்த வேகத்தில் லாரியின் முன் பகுதியே நசுங்கியதில், கழிவு நீர் லாரியின் உள்ளே இருந்த 2 பேர் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பகுதிவாசிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மத்திகிரி போலிசார், ஒசூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், ராட்சத மரம் விழுந்ததால் லாரியின் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால், உள்ளே சிக்கிய இருவரை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இருப்பினும், விரைந்து தீயணைப்பு வீரர்கள் ஆலமரத்தை வெட்டி அகற்றும் முயற்சியில் இறங்கினர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்புப் பணியின் பிறகு லாரியின் உள்ளே சிக்கிய இருவரின் உடல் மீட்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட இருவரும் உடல் நசுங்கி முன்பே உயிரிழ்ந்தது தெரியவர, மத்திகிரி போலிசார் இருவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்தவர்களின் பின்னணி குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தது பாளையம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான லாரி ஓட்டுநர் மாரப்பா என்றும், அவருடன் இருந்த மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான வெங்கடேஷ் என்பதும் தெரிய வந்தது. இருவரும் கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் வேலை செய்து வருவதும், பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஓசூர் நோக்கி கழிவுநீர் வாகனத்தில் சென்றபோது ஆலமரம் விழுந்து உடல் நசுங்கி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், முறிந்த விழுந்த பழமையான ஆலமரம் குறித்து அப்பகுதியினர் 15 நாட்களுக்கு முன்பே வருவாய்த்துறையினருக்கு புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் விசாரணையில் அம்பலமானது. அதிகாரிகள் மெத்தனத்தால் 2 உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இனியாவது ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடும் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, மரம் விழுந்ததில் ஏற்பட்ட இடர்பாடுகளை அதிகாரிகள் சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.