அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் டி. சுப்ரமணியம் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்குகள் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தன் மீது தொடர்ந்திருந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘முதலமைச்சரை விமர்சிக்கவில்லை. அரசைத்தான் விமர்சிக்கிறேன். எனவே இதில் எந்த தவறும் இல்லை’ எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான இரு தரப்பு வழக்கு விசாரணையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்று முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது தொடர்ந்திருந்த 4 அவதூறு வழக்குகளில் 2 அவதூறு வழக்குகளை மட்டும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் மற்ற இரு அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.