ஆத்தூர் அருகே, பெற்றோரின் கவனக்குறைவால் பொங்கலன்று குட்டை நீரில் மூழ்கி இரட்டைக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த கிராமத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை குப்பனூரைச் சேர்ந்தவர் தமிழரசன் (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் துளசி ராமன், துளசிதரன் என இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 14), சமையலுக்குத் தேவையான விறகுகளை சேகரித்து வருவதற்காக தமிழரசனும், அவருடைய மனைவியும் தங்கள் குழந்தைகளுடன் அருகில் உள்ள மீன் வளர்ப்பு குட்டை பகுதிக்குச் சென்றனர்.
குட்டையின் அருகே குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு தம்பதியினர் விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று குழந்தைகள் இருவரும், கெடுவாய்ப்பாக குட்டைக்குள் தவறி விழுந்தனர். இச்சம்பவம் குறித்து எதுவுமே அறியாத தம்பதியினர் விறகுகளை பொறுக்கிக்கொண்டு, குழந்தைகளை விட்டுச்சென்ற இடத்திற்கு வந்து பார்த்தனர். அங்கே அவர்களைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
குட்டைக்குள் விழுந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் உள்ளூர்க்காரர்களை அழைத்து வந்து குட்டைக்குள் இறங்கி தேடிப்பார்த்தனர். அப்போது குழந்தைகள் இருவரும் குட்டை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இரட்டைக்குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டன. தங்களின் கவனக்குறைவால் இரட்டைக் குழந்தைகளை இழந்து விட்டோமே என்று பெற்றோர் கதறி அழுதனர். பொங்கலன்று நடந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து கருமந்துறை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.