Skip to main content

“இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும்” - த.வெ.க. தலைவர் கோரிக்கை

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
tvk leader vijay about air show issue

சென்னையில் விமானப் படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். பின்பு வீடு திரும்பிய போது கூட்ட நெரிசலால் மிகப்பெரிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மக்கள் பலரும் அவதிப்பட்டனர். மேலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 பேர், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும், சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 5 பேரும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக இறந்துள்ளதாகவும், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இதனிடையே  போதிய அடிப்படை வசதியில்லாமல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளதாக எதிர்கட்சி உட்பட பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய், தான் நடத்தி வரும் த.வெ.க. சார்பில் இனி வரும் காலங்களில் தமிழக அரசு இது போன்ற நிகழ்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சியின் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, “சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்