தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தாக்குதல் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நேற்றிலிருந்து தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வேளச்சேரியில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களுக்கு அரை கிலோ ப்ளீச்சிங் பவுடர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''வீடுகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சம்ப் என்று சொல்லக்கூடிய அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் போன்ற நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி ,ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்தப்படுகின்ற மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்படுபவர்களுக்கு அனைவருக்கும் 1/2 கிலோ ப்ளீச்சிங் பவுடரும் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கொரோனா என்பது 2019 இறுதியில் தொடங்கி பல்வேறு வகைகளில், உருமாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு வசதியாக 98 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு மூன்று தடுப்பூசியை போட்டு இன்று தமிழக மக்கள் இடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் என்பது தொடர்ச்சியாக பல வழிகளில் வந்து கொண்டிருக்கிறது.
கொரோனா என்றும்; ஆல்பா என்றும்; பீட்டா என்றும்; டெல்டா என்றும்; டெல்டா பிளஸ் என்றும்; ஒமிக்கிரான் என்றும் கூட பல்வேறு வகைகளில் இந்த ஒரு மாற்றங்கள் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிங்கப்பூரில் நிறைய பேருக்கு ஒரு மாதிரியான கொரோனா தொற்று பரவல் இருப்பது அறியப்பட்டது. உடனடியாக சிங்கப்பூரில் இருக்கக்கூடிய 'நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்' அமைப்பில் பணியாற்றுகின்ற மருத்துவர்களோடு நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களிடம் கேட்டபோது, அவர்கள், ஒரு பாசிட்டிவான நோயாளிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் நெகட்டிவ் ஆகிவிடுகிறது, இது இருமல் மற்றும் சளி ஆகிய இரு உபாதைகளை மட்டுமே கொடுக்கிறது என்கின்ற வகையில் அவர்கள் நேற்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.