அண்மையில் கடல் பகுதிகளில் அதிகளவு கடல் சீற்றம் இருக்கும் என்பதால் கேரளா, தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட கடலை ஒட்டிய பல்வேறு கடலோர மாவட்டங்களில் கடலில் குளிக்கக் கூடாது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதையும் மீறி கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கடலில் குளித்த போது சிலர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் தந்தையும் மகளும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த பொழுது இருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தந்தையுடன் மீட்கப்பட்டார். அடுத்த நாள் வரை தேடல் பணியில் ஈடுபட்டு 6 வயது சிறுமி இறுதியாக சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகுதிக்குச் சுற்றுலா வந்த மருத்துவ மாணவர்கள் கடலில் குளித்த போது ஐந்து பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து கடற்கரைகளில் குளிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் புதுச்சேரி ராக் கடற்கரை பகுதியில் சில இளைஞர்கள் தடையை மீறி குளித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கரைக்கு கொண்டு வந்ததோடு, அந்தப் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுமாறு உத்தரவிட்டு தண்டனை கொடுத்தனர்.
ராக் கடல் பகுதி என்பது அதிகமாக ஆழம் கொண்ட பகுதியாகும். அதேநேரம் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடையை மீறி குளித்த இளைஞர்கள் போலீசாரால் பிடிக்கப்பட்டனர். பின்னர் குளியல் ஆடையுடனே கடற்கரைப் பகுதியில் இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டு தண்டனை கொடுத்தனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.