ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 46 கல்லூரி மாணவர்கள் நேற்று (02.03.2024) செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அதன்படி மாணவர்கள் முதலில் அங்குள்ள பல்லவ மன்னர்களின் புராதன சின்னங்களை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ள கடற்கரைக்குச் சென்று 10 மாணவர்கள் கடல் அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென எழுந்த ராட்சத அலையில் 10 மாணவர்களும் சிக்கி கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு, கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் மீனவர்கள் விரைந்து வந்து 6 மாணவர்களை மீட்டனர். இவர்களில் விஜய் (வயது 18) கரைக்கு வந்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மாயமான மோனிஷ் (19), பார்த்தி (18), ஷேசா ரெட்டி (18), பெத்துராஜ் பிரபு (19) ஆகிய 4 மாணவர்களை மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள் படகு மூலம் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் ஷேசா ரெட்டி, மோனிஷ், பெத்துராஜ் பிரபு ஆகிய 3 பேரின் உடல்கள் இன்று (03.03.2024) கடலில் ஒதுங்கியது. இதையடுத்து 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.