தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி (20.06.2024) அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் விண்ணப்பதாரர்கள் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2327 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை எனத் தேர்வர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் ஜூலை 20ஆம் தேதி வரை (20.07.2024) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதன் மூலம் ஒரு பணியிடத்திற்குச் சராசரியாக 340 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டிருந்த ஆண்டு அட்டவணையில் (ANNUAL PLANNER) செப்டம்பர் 28ம் தேதி எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால் போட்டித் தேர்வர்கள் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. அதில், “குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு தேதியில் எவ்வித மாற்றமும் இல்லை. குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு ஏற்கெனவே அறிவித்தபடி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும். இந்த தேர்வுக்கான மொத்த காலிப்பணியிடம் 2 ஆயிரத்து 327 ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.