தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பு வகித்து வந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த முருகானந்தம் தமிழக அரசின் பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். இவர் திருநெல்வேலி சார் ஆட்சியராகத் தனது பணியைத் தொடங்கியவர் ஆவார். கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக இருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக நிதித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் இன்று (19.08.2024) பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிலையில் என். முருகானந்தம் வகித்து வந்த முதல்வரின் முதலாவது முதன்மை செயலாளர் பதவிக்கு உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று முதல்வரின் இரண்டாவது முதன்மை செயலாளராக எம். எஸ். சண்முகமும், முதல்வரின் மூன்றாவது முதன்மை செயலாளராக அணு ஜார்ஜ் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.